சாய் சுதர்சன் அணி சாம்பியன்.. ரியான் பராக் 354 ரன்.. அனல் பறந்த தியோதர் டிராபி!

0
4035
Riyan Paragg

ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில், மண்டலங்களாக அணிகள் பிரிக்கப்பட்டு, இந்திய உள்நாட்டில் நடத்தப்படும் தியோதர் டிராஃபியின் இறுதிப்போட்டி நேற்று புதுச்சேரியில் நடைபெற்றது!

இந்தப் போட்டியில் மயங்க் அகர்வாலின் தலைமையிலான தென் மண்டல அணியும், சௌரப் திவாரி தலைமையிலான கிழக்கு மண்டல அணியும் மோதின. போட்டிக்கான டாஸ் வென்ற தென் மண்டல அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் மயங்க் அகர்வால் மற்றும் கேரளாவை சேர்ந்த ரோகன் குன்னும்மால் இருவரும் களமிறங்கி 181 ரன்கள் என்று சிறப்பான முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அதிரடியாக விளையாடிய குன்னும்மால் 75 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 107 ரன்கள் குவித்தார். இவருக்கு உறுதுணையாக விளையாடிய மயங்க் அகர்வால் 83 பந்துகளில் நான்கு பவுண்டரி உதவியுடன் 63 ரன்கள் எடுத்தார்.

கடந்த போட்டியில் சதம் விளாசி இருந்த தமிழகத்தின் சாய் சுதர்சன் இந்த போட்டியில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனாலும் மற்றுமொரு தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசன் 60 பந்துகளில் 54 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் தென் மண்டல அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 328 ரன்கள் சேர்த்தது. கிழக்கு மண்டலம் சார்பாக ரியான் பராக் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய கிழக்கு மண்டல அணிக்கு பேட்டிங்கின் மேல் வரிசையில் பெரிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. நான்காவதாக வந்த சுதீப் குமார் கர்மானி மட்டும் 41 ரன்கள் எடுத்தார். இதனால் கிழக்கு மண்டல அணி நெருக்கடியில் விழுந்தது.

- Advertisement -

இந்த தொடர் முழுக்க கிழக்கு மண்டல அணியைக் காப்பாற்றிய ஆறாவது இடத்தில் வரும் ரியான் பராக் மற்றும் ஏழாவது இடத்தில் வரும் குமார் குஷக்ரா இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து கிழக்கு மண்டல அணியைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டார்கள்.

தொடர்ந்து இரு போட்டிகளில் அபாரமாகச் சதம் விளாசி அசத்தியிருந்த ரியான் பராக், இந்தப் போட்டியிலும் அதிரடியாக விளையாடி சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் 65 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 95 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருடைய கூட்டாளி குமார், குஷ்கராவும் அடுத்து 68 ரண்களில் ஆட்டம் இழக்க, 283 ரன்களுக்கு கிழக்கு மண்டல அணி ஆல்அவுட் ஆனது.

இதையடுத்து 43 ரன்கள் வித்தியாசத்தில் 2023 தியோதர் டிராபியை மயங்க் அகர்வால் தலைமையிலான தென்மண்டல அணி கைப்பற்றி அசத்தியது. இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக ரோகன் குன்னும்மால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தத் தொடரின் நாயகனாக இரண்டு சதம் மற்றும் ஒரு அரை சதம் என 354 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தி இருந்த ரியான் பராக் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொடர் முழுக்க அவரது பேட்டிங் அதிரடியாகவும், பந்துவீச்சில் பலவகையான வேரியேஷன்களையும் கொண்டு கலக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.