அறிமுக போட்டியில் 7 விக்கெட், எதிரணியை தனது சுழலில் சுருட்டிய சாய் கிஷோர்!

0
648

துலீப் டிராபி தொடரில் சவுத் ஜோன் அணிக்காக அறிமுகமான சாய் கிஷோர் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ரஞ்சி கோப்பைக்கு அடுத்து மிக முக்கியமான ஒரு தொடராக பார்க்கப்படுவது துலீப் டிராபி டெஸ்ட் தொடராகும். இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இத்தொடர் நடைபெறுகிறது. இரண்டு காலிறுதி, இரண்டு அரை இறுதி மற்றும் இந்த நான்கு போட்டியில் இருந்து தேர்வாகும் இரண்டு அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. மொத்தம் ஐந்து போட்டிகள் நடைபெறும் இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்றன.

- Advertisement -

செப்டம்பர் 8ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் இத்தொடரின், இரண்டாவது அரையறுதி போட்டியில் தெற்கு அணி மற்றும் வடக்கு அணி மோதின. முதலில் பேட்டிங் செய்த தெற்கு அணி அதிரடியாக விளையாடி வடக்கு அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தன. தெற்கு அணிக்காக துவக்க வீரராக களமிறங்கிய ரோஹன் குன்னும்மல் (143), ஹனுமா விசாரி (134) மற்றும் ராக்கி (103*) ஆகியோர் சதம் விளாசினர். இரண்டாம் நாள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 630 ரன்கள் அடித்திருந்த தெற்கு அணி டிக்ளர் செய்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த வடக்கு அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தெற்கு அணியை சேர்ந்த சாய் கிஷோர். இவருக்கு இதுவே அறிமுக துலீப் டிராபி போட்டியாகும். அறிமுக போட்டியிலேயே தனது சுழல் பந்துவீச்சால் எதிரணியை திணறடித்த சாய் கிஷோர், அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து வடக்கு அணியை ஒட்டுமொத்தமாக சரித்தார். 25 ஓவர்கள் வீசிய சாய் கிஷோர், 70 ரன்கள் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய சாதனையை படைத்தார். துலீப் டிராபி வரலாற்றில் அறிமுக வீரரின் மிகச்சிறந்த பந்துவீச்சு இதுவாகும்.

67 ஓவர்கள் விளையாடிய வடக்கு அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாலோ-ஆன் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, இல்லை இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் விளையாடுகிறோம் என்று தெற்கு அணியின் கேப்டன் ஹனுமா விஹாரி முடிவு செய்தார். தெற்கு அணிக்கு முதல் இன்னிங்சில் சதம் அடித்த குன்னும்மல் இப்போட்டியிலும் அரைசதம் அடித்தார். இவர் 77 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். முதல் போட்டியில் ஒரு எண்ணில் அரைசதம் தவறவிட்ட மயங்க் அகர்வால், இம்முறை 53 ரன்களுக்கு ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

- Advertisement -

மூன்றாம் நாள் முடிவில் 28 ஓவர்கள் பிடித்திருந்த தெற்கு அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்திருந்தது. இதன் மூலம் 580 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. மீதம் இரண்டு நாட்கள் முழுமையாக இருப்பதால் நிச்சயம் தெற்கு அணி இப்போட்டியில் வெற்றி பெறும் என்று பலரும் கருதுகின்றனர். தெற்கு அணி வெற்றி பெறும் பட்சத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு பெறும்.

துலீப் டிராபி தொடரில் அறிமுகமான முதல் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது முழு திறமையை காட்டிய சாய் கிஷோர் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறார். ஏற்கனவே இவர் தமிழக அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.