2022 ஐபிஎல் தொடரில் இவர் தான் ‘ குறைந்து மதிபிடப்பட்ட வீரர் ‘ – சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

0
2116
Sachin Tendulkar

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அவ்வப்போது தன் யூடியூப் சேனலில் நடந்துவரும் கிரிக்கெட் போட்டிகள் குறித்து ருசிகரமாக பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் அவர் இந்திய அணியின் சீனியர் கிரிக்கெட் வீரர் ஒருவரை 2022 ஐபிஎல் தொடரின் ‘ குறைந்து மதிப்பிட்டவர் ‘ சுட்டிக் காட்டியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லர் மற்றும் கே.எல்.ராகுலின் அதிரடி ஆட்டம், உம்ரான் மாலிக்கின் வேகம், சாஹலின் பலம்வாய்ந்த கம்பேக் என ஒரு சில நட்சத்திரங்கள் அனைவரது கவனத்தையும் அவர்கள் பக்கம் சேர்த்துள்ளனர். மறுபக்கம் குஜராத் அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் சாஹா, அமைதியாக ரன்கள் சேர்த்து அசத்தி வருகிறார். இந்த 37 வயதான கிரிக்கெட் வீரர் ஹைதராபாத் அணிக்கு எதிராக 68, மும்பைக்கு எதிராக 55 மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் என மூன்று அரை சதங்கள் உட்பட மொத்தம் 300 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் தன்னால் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முடியும் என்பது நிரூபித்துள்ளார்.

இவர் குறித்து சச்சின் டெண்டுல்கர் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார். “ சாஹா மிகவும் குறைந்து மதிப்பிடப்பட்ட வீரர். ஆனால் நான் அவரை அபாயகரமான வீரர் என மதிப்பிடுவேன். ஏனென்றால் ஸ்பின்னர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் இருவரையும் மைதானத்தின் அனைத்து பக்கத்திலும் அடிக்கும் திறன் கொண்டவர் இவர். தொடக்கத்தில் இவருக்கு பெரிதாக ஸ்டிரைக் கிடைக்காமல் போனதால் இவரது ஆட்டம் பாதிக்கப்பட்டது. பொதுவாக ஒரு வீரர் நன்றாக விளையாடினால் அவருக்கு தொடர்ந்து ஸ்டிரைக் கொடுப்பது அவசியம். ஆனால் அது அவருக்கு கிடைக்கவில்லை. ” என்றார் டெண்டுல்கர்.

ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் தொடக்க வீரர் கில் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சாஹா ரன் அவுட் ஆக அடுத்து வந்த மேத்யூ வேட் நடுவரின் தவறான முடிவால் கோபத்துடன் பெவிலியன் திரும்பினார். இந்த சர்ச்சை குறித்தும் சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார். “ சாஹா – வேட் இருவரும் இணைந்து ஏதாவது செய்வர் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை. என்னைப் பொரறுத்தவரை நடுவரின் மோசமான முடிவால் அவர் வெளியேற நேர்ந்தது என்பேன். அந்த பந்து விலகி செல்பதை நாம் தெளிவாக பார்த்தோம். ” என்றார்.