சச்சின், சேவாக், யுவராஜ் எல்லாம் பண்ணாங்க.. இப்போ இருக்கும் பேட்ஸ்மேன்கள் பண்ண மாட்டாங்களோ? – முன்னாள் இந்திய வீரர் சரமாரி கேள்வி!

0
1557

சச்சின், சேவாக், யுவராஜ் போன்ற பேட்ஸ்மேன்கள் செய்ததை இப்போது இருக்கும் பேட்ஸ்மேன்கள் செய்வது இல்லையே ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

இந்திய அணியில், 6 பந்துவீச்சாளர்கள் உடன் விளையாட வேண்டுமா? அல்லது 5 பந்துவீச்சாளர்கள் போதுமா? என்ற சிக்கல் தொடர்ந்து நிலவி வருகிறது. ஒரு கூடுதல் பேட்ஸ்மனை இறக்கி விளையாடலாம் என்று 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினால், அது இந்திய அணிக்கு சிக்கலாக மாறிவிடுகிறது.

கடந்த ஜெனரேஷன் இந்திய அணியில் இப்படியான சிக்கல் இல்லை. ஏனெனில் பந்துவீச்சாளர்கள் அன்றைய தினம் சொதப்பும் பொழுது சேவாக், சச்சின், கங்குலி ஆகியோர் பந்து வீசக்கூடியவர்கள். ஆனால் தற்போது இருக்கும் இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் இயர் ஆகியோர் முற்றிலுமாக பந்துவீசுவதையே தவிர்த்துவிட்டனர். இதுதான் சிக்கலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்த விவகாரத்தை குறிப்பிட்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா. “இந்திய அணி நிர்வாகம் பேட்ஸ்மேன்களுக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுப்பது எந்த வகையில் சரியாகும். தற்போது இருக்கும் இந்திய அணியில் சில பேட்ஸ்மேன்கள் நன்றாக பந்து வீசக்கூடியவர்கள்.

உதாரணமாக ரோகித் சர்மா, இதற்கு முன்னர் ஸ்பின் பவுலிங் செய்து கொண்டிருந்தார். விராட் கோலியும் பந்து வீசிக்கொண்டிருந்தவர் தான். மேலும் ஸ்ரேயாஸ் ஐயரும் பந்துவீசுவார். ஏன் இவர்கள் பயிற்சியின்போது, பந்துவீச்சு பயிற்சிகளில் ஈடுபடுவது இல்லை. முழுக்க முழுக்க பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். பவுலர்களும் தற்போது பேட்டிங் பயிற்சியில் கூடுதலாக ஈடுபடுகின்றனர்.

இந்திய அணி எப்போது வெளிநாட்டிற்கு பயணம் சென்றாலும், பயிற்சி பந்துவீச்சாளர் என நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை உடன் அழைத்துச் செல்கின்றனர். இதனால் பேட்ஸ்மேன்கள் பவுலிங் செய்வதை பற்றி யோசிப்பதே இல்லை. இதன் காரணமாகத்தான் இந்திய அணியின் பந்துவீச்சில் தொடர்ந்து குழப்பங்களும் சிக்கல்களும் இருந்து வருகிறது.” என்று சாடினார்.