11 ஆண்டுகளுக்கு முன் 2011 உலகக்கோப்பை பைனலில் சச்சின் என்னிடம் கூறிய மூன்று வார்த்தைகள் இதுதான் – விராட் கோலி வெளிப்படைப் பேச்சு

0
894
Virat Kohli and Sachin Tendulkar 2011 CWC

11 ஆண்டுகளுக்கு முன் இன்றைய நாள் இரவு தந்த மகிழ்வை, சிறப்பை, வரலாற்றை, இந்திய கிரிக்கெட் இரசிகர்களும், இந்திய கிரிக்கெட் வாரியமும், நூற்றாண்டுகள் கடந்தும் என்றென்றும் நினைவுகொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

கடந்த தசாப்தம் 2011-ல் இந்தியாவில் நடந்த ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்று உயர்த்தியது. எத்தனை மறக்க முடியாத ஆட்டங்கள்! எத்தனை மறக்க முடியாத வீரர்கள்! எத்தனை திருப்பங்கள்! எவ்வளவு சுவராசியங்கள்!

உலக கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டிகளின் கதாநாயகன் சச்சின் டெண்டுல்கரின் கடைசி உலகக்கோப்பை என்பதும், அவர் இதுவரை உலகக்கோப்பை வென்ற அணியில் இருந்ததில்லை என்பதும், அந்த உலகக்கோப்பை இந்தியாவில் நடந்தது என்பதும், அப்போது மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்திய அணி புதிய எழுச்சியைக் கண்டிருந்ததும் என்பதும், அந்த உலககோப்பையை இந்திய கிரிக்கெட் இரசிகர்களிடம் மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட் இரசிகர்களிடமும் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருந்தது!

மும்பை வான்கடேவில் உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் நாற்பதாவது ஓவர்கள் வரை 250 ரன்களுக்குள் இலங்கை அணியைக் கட்டுப்படுத்தி விடலாம் என்றிருக்க, மஹேல ஜெயவர்த்தனே தன் கிளாஸ் சதத்தின் மூலம் பின்வரிசை பேட்டர்களை வைத்துக்கொண்டு 274 ரன்களுக்கு அணியைக் கொண்டுவந்தார். மேலும் இந்திய அணி இரசிகர்களின் மனதை உடைக்கும் விதமாக, முதல் ஆறு ஓவரில் 31 ரன்களுக்கு, அதிரடி சூரர் சேவாக், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் இருவரையும் மலிங்கா வெளியேற்றினார்.

அப்போது கம்பீருடன் இணைந்து அணியை மீட்டெடுத்தாக வேண்டிய நெருக்கடியான நேரத்தில் இளம் வீரர் களமிறங்கி, முக்கியமான 83 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்து 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அவர் களம் புகும்போது, ஆட்டமிழந்து வந்த சச்சின் சிலவார்த்தைகள் இளம் விராட் கோலியிடம் பேசிவிட்டு போவதை, உலகக்கோப்பையை வென்று 11 ஆண்டுகள் ஆவதையொட்டி, ராயல் சேலன்ஞ்சர்ஸ் பெங்களூர் அணி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.

இன்று அதுவழியாக 11 வருடங்களுக்கு முன்னான நினைவுகளை விராட் கோலி பகிர்ந்திருக்கிறார். அதில் “நான் 35 ரன்கள் எடுத்தேன். அந்த 35 ரன்கள் என் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான 35 ரன்கள். இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற அந்த ஆட்டத்தில் என் பங்கும் இருந்தது குறித்து எப்போதும் எனக்கு மகிழ்ச்சிதான். மைதானத்தில் இரசிகர்கள் பாடிய “வந்தே மாதரம்” “ஜோ ஜீத்தா வகி சிக்கந்தர்” பாடல்கள் ஒரு கனவுபோலானது. இதுவெல்லாம் நினைவில் எப்போதும் பசுமையாய் இருக்கக்கூடியது” என்று கூறினார்.

மேலும் முக்கிய விசயமாக அவர் “நான் களத்திற்குள் புகும்பொழுது, சச்சின் அவர்கள் என்னிடம் பார்ட்னர்ஷிப்பை உருவாக்குங்கள் என்று கூறிச்சென்றார்” என்று, அந்த முக்கியமான நாளில், மிக முக்கியமான மனிதர் கூறிய வார்த்தைகளை, நினைவுப்படுத்தி பகிர்ந்திருக்கிறார்!