சச்சின் கோல்டன் டக்; நமன் ஓஜா அதிரடி சதம்; இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி அசத்தல்!

0
7850
Naman Ojha

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 8 நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபெறும் சாலை பாதுகாப்பு டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்குபெற்ற 8 அணிகளுக்கும் மொத்தம் 5 ஆட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் முதல் 4 இடங்களைப் பிடித்த இலங்கை, ஆஸ்திரேலியா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

- Advertisement -

நேற்றைக்கு முந்தைய தினம் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதியதில், இந்திய அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்று இலங்கை வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று ராய்ப்பூர் மைதானத்தில் இறுதிப் போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் முதலில் இந்தியா பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

இதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சினும், நமன் ஓஜாவும் களமிறங்கினார்கள். இதில் குலசேகராவின் பந்துவீச்சில் சச்சின் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

ஆனால் மற்றுமொரு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் நமன் ஓஜா அதிரடியில் இலங்கை பந்துவீச்சை பின்னி எடுத்துவிட்டார். எழுபத்தி ஒரு பந்துகளை சந்தித்த அவர் 108 ரன்களை குவித்தார். இதில் 15 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடக்கம்.

இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா 4 ரன்கள், யுவராஜ் சிங் 19 ரன்கள், இர்பான் பதான் 11 ரன்கள், யூசுப் பதான் 0 என வெளியேறினார்கள். ஆனால் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் வினய் குமார் இருபத்தி ஒரு பந்துகளில் 36 ரன்கள் குவித்தார். ஸ்டூவர்ட் பின்னி 8 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 195 ரன்கள் குவித்தது. இதையடுத்து இந்த பெரிய இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது!