மாட்டிக்கிட்டு விளையாட ஒரு நல்ல ஷூ குடுங்கன்னு கெஞ்சிய ஜிம்பாப்வே வீரர், ஆஸ்திரேலிய மண்ணில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்!

0
150

போன வருடம் போட்டுக் கொள்வதற்கு ஒரு நல்ல ஷூ இல்லை என்று மன்றாடிய ஜிம்பாப்வே வீரர், ஆஸ்திரேலியா மண்ணில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய அணியுடனான ஒருநாள் தொடரை முடித்த பிறகு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஜிம்பாப்வே அணி, அங்குள்ள டவுன்வில்லே மைதானத்தில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் மற்றும் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

- Advertisement -

செப்டம்பர் மூன்றாம் தேதி நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரராக களம் இறங்கிய டேவிட் வார்னர் நங்கூரம் போல நின்று பேட்டிங் செய்தார். மறுமுனையில் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர். அரைசதம் கடந்த டேவிட் வார்னர், சதத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட போது துரதிஷ்டவசமாக 94 ரன்களுக்கு அவுட் ஆனார். 31 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

ஜிம்பாப்வே அணிக்கு அபாரமாக பந்து வீசிய ரியான் பார்ல் 3 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதே ரியான் பார்ல் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம், மாட்டிக் கொண்டு விளையாடுவதற்கு ஒரு நல்ல ஷூ இல்லை யாராவது ஸ்பான்சர் தந்து உதவுங்கள் என்று ட்விட்டர் பக்கத்தில் மன்றாடினார். தற்போது ஆஸ்திரேலியா போன்ற பலமிக்க அணியை தனது பந்துவீச்சால் துவம்சம் செய்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய இவருக்கு சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

எளிய இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணி 39 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஜிம்பாப்வே அணி பெரும் முதல் வெற்றி இதுவாகும். ஐந்து விக்கெட்டுகள் மற்றும் பேட்டிங்கில் பங்களிப்பு என ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பார்ல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஷூ ஸ்பான்சர் வேண்டும் என்று கடந்த ஆண்டு இவர் செய்த ட்வீட் தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

- Advertisement -