நல்ல ஷூ கூட இல்லாத ஜிம்பாப்வே வீரர் ஒரே ஓவரில் 6,6,6,6,4,6 விளாசி சாதனை! பங்களாதேஷ் – ஜிம்பாப்வே

0
2008
Ryan burl

பங்களாதேஷ் அணி வெஸ்ட்இன்டீஸிற்குச் சுற்றுப்பயணம் செய்து, டி20 தொடரை இழந்தது. ஆனால் ஒருநாள் தொடரில் வெஸ்ட்இன்டீஸ் அணியை 3-0 என வொய்ட்வாஷ் செய்து அபாரமாய் வெற்றி பெற்றது!

இதையடுத்து பங்களாதேஷ் அணி ஜிம்பாப்வேற்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும், மூன்று ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் கடந்த ஜூலை 30ஆம் தேதி முதல் இரு அணிகளும் மோதி வருகின்றன. முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 17 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் பங்களாதேஷ் ஏழு விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றிபெற தொடர் 1-1 என சமன் ஆனது!

- Advertisement -

இந்த நிலையில் தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி ஹராரே நகரின் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸில் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் கிரேக் எர்வின் பேட்டிங்கை தேர்வு செய்தார்!

ஜிம்பாப்வே கேப்டனின் முடிவு தவறு என்பது போல, பங்களாதேஷ் பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சில் ஜிம்பாப்வேயின் முக்கிய பேட்ஸ்மேன்கள் கிரேக் எர்வின், சிக்கந்தர் ராஸா, ஸீன் வீல்லியம்சன் உட்பட முதல் ஆறு விக்கெட்டுகள் சீக்கிரத்தில் பெவிலியன் திரும்பினார்கள்.

இந்த நிலையில் 14 ஓவர்களுக்கு ஆறு விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் என்று ஜிம்பாப்வே அணி பரிதாபமான நிலையில் இருந்தது. இந்த நிலையில் ஆட்டத்தின் 15வது ஓவரை பங்களாதேசின் நசும் அகமத் வீச, அந்த ஓவரை முழுமையாக எதிர்கொண்ட ரியான் பர்ல் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார். அந்த ஒரே ஓவரில் மட்டும் 6, 6, 6, 6, 4, 6 என ஐந்து சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி மொத்தம் 34 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார். இறுதியில் இவர் 28 பந்தகளில் இரண்டு பவுண்டரி, ஆறு சிக்ஸர்களோடு 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இருபது ஓவர்களின் முடிவில் ஜிம்பாப்வே அணி 158 ரன்களை எடுத்துள்ளது. தற்போது பங்களாதேஷ் அணி தனது பேட்டிங்கை துவங்கியுள்ளது!

- Advertisement -

இந்த ரியான் பர்ல்தான் முன்பு தனது ட்வீட்டரில் ஒவ்வொரு போட்டிகளுக்குப் பிறகும், நாங்கள் கிழிந்த ஷூக்களை ஒட்டி வைப்பது மட்டும் மாறவில்லை என்று ஸ்பான்சர் இல்லாத குறையை உருக்கமாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து புமா நிறுவனம் அந்த ட்வீட்டை கண்டு தாங்கள் ஸ்பான்சர் செய்வதாக அறிவித்திருந்தது. கிழிந்த ஷூவை ஒட்டி ஒட்டி போட்டிகளில் பங்கேற்று வந்தவர், இன்று தனது அதிரடி பேட்டிங்கால் மிரட்டி இருக்கிறார். நல்ல ஸ்பான்சர்கள் கிடைத்தால் ஜிம்பாப்வே அணி திரும்பவும் எழுந்து வரும்!