ருதுராஜின் இடம்.. 6000 ரன்களுக்கு மேல் அடித்த உள்நாட்டு வீரர்.. இந்த முறையாவது அது நடக்குமா?

0
537
Ruturaj

இந்திய அணி தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை பந்து தொடர்களை முடித்துக் கொண்டு சிவப்பு பந்து தொடருக்கு தயாராகி இருக்கிறது.

முதலில் டி20 தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையிலும் பின்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை கே எல் ராகுல் தலைமையிலும் சந்தித்த இந்திய அணி, தற்பொழுது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ரோகித் சர்மா தலைமையில் சந்திக்க தயாராக இருக்கிறது.

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா என, உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு விளையாடாத முக்கிய வீரர்கள் விளையாடுகிறார்கள்.

மேலும் இந்தத் தொடரில் இருந்தே கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ச்சியாக இந்திய அணியை வழிநடத்துவாரா என்பது குறித்தும் ஓரளவுக்கு தெளிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 2023 – 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு, இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்காவில் நடக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மிகவும் முக்கியமான ஒன்று. வெளிநாடுகளிலும் வென்றால்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் மூன்று வடிவ இந்திய அணிகளிலும் ருதுராஜ் இடம் பிடித்திருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் போது விரலில் காயம் அடைந்து, தற்பொழுது இந்திய டெஸ்ட் அணியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

இவரது இடத்திற்கு பெங்கால் மாநில அணிக்காக துவக்க ஆட்டக்காரராக விளையாடும் 28 வயதான வலது கை பேட்ஸ்மேன் அபிமன்யு ஈஸ்வரன் தேர்வாகி இருக்கிறார். இவர் நீண்ட காலமாக இந்திய அணிக்கு தேர்வாகிறார், ஆனால் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. இந்த முறையும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

அபிமன்யு ஈஸ்வரன் உள்நாட்டு கிரிக்கெட்டில் முதல் தரப் போட்டிகளில் 88 போட்டிகளில், 152 இன்னிங்ஸ்களில், 54 ஆவரேஜில், 26 அரை சதங்கள் மற்றும் 22 சதங்கள் உடன், 6567 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் இவருடைய அதிகபட்ச ஸ்கோராக 233 ரன்கள் இருக்கிறது.

பொதுவாக இந்திய அணிக்கு தற்போது தேர்வாகக்கூடிய எல்லா வீரர்களுமே, ஐபிஎல் தொடரில் பளிச்சிட்ட வீரர்களாகவே இருக்கிறார்கள். அங்கிருந்து மூன்று வடிவ இந்திய கிரிக்கெட் அணிகளிலும் வாய்ப்பை பெறுகிறார்கள். ஆனால் உள்நாட்டு கிரிக்கெட்டை மட்டுமே நம்பி இருக்கும் அபிமன்யு ஈஸ்வரன் போன்றவர்கள், உள்நாட்டு கிரிக்கெட்டில் எவ்வளவு ரன்கள் அடித்தாலும், இந்திய தேசிய அணியில் இடம் கிடைக்கும் கூட விளையாட முடியாத துயரம் நீடிக்கிறது. இந்த முறையாவது இது மாறுமா என்று பார்க்க வேண்டும்!