“ஆஸ்திரேலியாவுல ஒழுங்கா விளையாடினால்தான் ரன் வரும் ” – ஆட்டநாயகன் விராட் கோலி அதிரடி பேச்சு!

0
7566
Viratkohli

ஆஸ்திரேலியாவின் அடிலைட் மைதானத்தில் எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று பரபரப்பான ஒரு போட்டி நடந்து முடிந்திருக்கிறது!

இந்தப் போட்டியில் பங்களாதேஷ் முதலில் டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக வந்த கேப்டன் ரோகித் சர்மா இரண்டு ரன்னில் வெளியேறினார். இதற்கு அடுத்து கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி இந்தியா அணிக்கு நல்ல ரன்களை கொண்டு வந்தார்கள்.

கே.எல்.ராகுல் 32 பந்தில் அரை சதம் அடித்து வெளியேற, விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 184 ரன்கள் எடுத்தது.

இதற்கு அடுத்து களம் இறங்கிய பங்களாதேஷ் அணியின் துவக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸும், மழையும் சேர்ந்து இந்திய அணிக்கும் இந்திய அணி ரசிகர்களுக்கும் பெரிய பதட்டத்தைக் கொடுத்தது.

மழை நின்று மீண்டும் போட்டி துவங்க பீல்டிங்கில் கே.எல்.ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் கலக்க, பந்துவீச்சில் முகமது சமி, ஹர்திக் பாண்டியா, அர்ஸ்தீப் ஆகியோர் மிரட்ட, பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் இந்திய அணி இறுதியாக ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின் நாயகனாக விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்த ஆட்டம் குறித்து பேசும் பொழுது “மிகவும் அழகான நெருக்கமான ஆட்டம். நெருக்கமான ஆட்டம் மட்டுமல்ல இது நாங்கள் விரும்பும் ஆட்டம். நான் என்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆட விரும்பினேன். நான் உள்ளே வரும் பொழுது கொஞ்சம் அழுத்தம் இருந்தது. நான் பந்துகளை நன்றாக பார்த்தேன். நான் தற்போது மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன்” என்றவர்…

மேலும் தொடர்ந்து ” கடந்த காலங்களில் நடந்தது கடந்த காலத்தோடு முடிந்துவிட்டது. நான் இதனால் எதையும் ஒப்பிடுவதில்லை. ஆஸ்திரேலியாவில் இந்த உலகக் கோப்பை தொடர் நடப்பது தெரிந்ததும் நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன். இங்கு நல்ல கிரிக்கெட் ஷாட்கள் விளையாடினால் ரன்கள் கிடைக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இப்படி விளையாடுவதுதான் இங்கு திருப்புமுனையாக அமையும். ஆஸ்திரேலியாவில் விளையாடி உள்ள என் அனுபவம் மற்றும் ஆட்ட விழிப்புணர்வு இந்திய அணிக்கு உதவும் என்று நினைத்தேன். மிக உண்மையாக நான் இந்த மைதானத்தில் விளையாடுவதை விரும்புகிறேன். பின்புறம் வலைப் பயிற்சி செய்து விட்டு அப்படியே வந்து களமிறங்குவது வீட்டில் இருப்பதைப் போல இருக்கிறது. மெல்போனில் விளையாடியது சிறப்பான ஒன்று ஆனால் இங்கு வந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்று எண்ணி எனது பேட்டங்கை அனுபவித்து விளையாடினேன்” என்று தெரிவித்தார்!