ருதுராஜ் இரண்டாவது சதம் அடித்து அசத்தல் ; சஞ்சு சாம்சன் ஏமாற்றம் ; சையது முஷ்டாக் அலி டிராபி!

0
2096
Ruduraj

இந்திய உள்நாட்டு டி20 தொடரான சையது முஷ்டாக் அலி டிராபி இந்தியாவின் 6 நகரங்களில் நடந்து வருகிறது. மொத்தம் ஐந்து பிரிவுகளில் முப்பத்தி எட்டு அணிகள் பிரிக்கப்பட்டு, காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி என்ற முறையில் இந்த தொடர் நடத்தப்படுகிறது.

குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ருதுராஜ் தலைமையிலான மகாராஷ்டிரா அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான கேரள அணியை எதிர்கொண்டு இன்று விளையாடியது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற மகாராஷ்டிரா அணி முதலில்பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

இதன்படி மகாராஷ்டிரா பேட்டிங்கை துவங்க கேப்டன் ருதுராஜ் மற்றும் பவன் இருவரும் களமிறங்கினார்கள். பவன் 29 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, ராகுல் திரிபாதி ரன் இல்லாமல் வெளியேற, ஒரு முனையில் நிலைத்து நின்ற கேப்டன் ருதுராஜ் 68 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 7 சிக்சர்களுடன் 114 ரன்கள் குவித்தார். இந்தத் தொடரில் இது அவருக்கு இரண்டாவது சதமாகும். 20 ஓவர்கள் முடிவில் மகாராஷ்டிரா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய கேரள அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ரோகன் அரைசதம் அடித்தார். ஆனால் இதற்கு அடுத்து வந்த எந்த பேட்ஸ்மேனும் சரியான ஒத்துழைப்பு தரவில்லை. கேப்டன் சஞ்சு சாம்சன் 7 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு கேரள அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 40 ரன்கள் வித்தியாசத்தில் மகாராஷ்டிரா அணி வெற்றியை பதிவு செய்தது.

இந்த தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு ருதுராஜ் கேப்டனாக மட்டுமில்லாமல் விக்கெட் கீப்பர் ஆகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சனை ருதுராஜ் ஸ்டம்ப்பிங் செய்திருந்தார்!

- Advertisement -