10 வருஷத்துக்கு முன்னாடி இதுமட்டும் நடக்கலைன்னா, ரோகித் சர்மான்னு ஒரு பிளேயரையே நம்ம பாத்திருக்க முடியாது – ராகுல் டிராவிட் பேட்டி!

0
4649

10 வருடத்திற்கு முன் ரோகித் சர்மா கிரிக்கெட் வாழ்க்கையில் இதுமட்டும் நடக்கவில்லை என்றால், அவரை நாம் இவ்வளவு பெரிய வீரராக பார்த்திருக்க முடியாது என்று ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த வீரர்களுள் ஒருவர் என்று சந்தேகத்திற்கு இடமின்றி ரோகித் சர்மாவை கூறலாம். ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதம் அடித்திருக்கிறார். இவரை தவிர வேறு எந்த வீரரும் இரண்டு இரட்டை சதங்கள் கூட அடித்தது இல்லை.

ஒரு உலக கோப்பையில் ஐந்து சதங்கள் அடித்த சாதனை, டி20 போட்டிகளில் நான்கு சதங்கள் அடித்த சாதனை என இவரின் பெயரில் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

2007 ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான ரோகித் சர்மா 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இடம்பெறவில்லை காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அடுத்து இரண்டு வருடங்கள் இந்திய அணிக்குள் இடம்பெற தவித்து வந்த இவரை, மீண்டும் தோனி தன் தலைமையிலான இந்திய அணிக்குள் எடுத்துக்கொண்டார்.

அப்போது வழக்கமாக விளையாடும் மிடில் ஆர்டரில் விளையாட வைக்காமல் துவக்க வீரராக தென்னாப்பிரிக்கா தொடரில் களம் இறக்கினார். அதன் பிறகு தான் ரோகித் சர்மாவால் இவ்வளவு சாதனைகளை படைக்க முடிந்தது.

10 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்வை குறிப்பிட்டு பேசிய ராகுல் டிராவிட், ரோஹித் சர்மா மட்டும் அன்று துவக்க வீரராக களமிறங்கவில்லை என்றால் இவ்வளவு பெரிய வீரராக அவர் வளர்ந்திருப்பது சந்தேகம்தான் எனவும் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் டிராவிட் பேசியதாவது: “ரோகித் சர்மாவை எனக்கு சுமார் 17-18 வயதில் இருந்தே தெரியும். அண்டர் 19 அணியில் விளையாடிவிட்டு இந்திய அணிக்குள் வந்தார். எதிர்பார்த்தவாறு அவருக்கு துவக்க காலத்தில் சர்வதேச போட்டிகள் அமையவில்லை. திறமை இருந்தும் தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வந்தார்.

ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை அவர் துவக்க வீரராக களமிறங்கிய பின்பு தான் மாறியது. தென்னாபிரிக்க அணியுடன் ஜனவரி 18ம் தேதி நடந்த போட்டியில் துவக்க வீரராக களம் இறங்கி அசத்தினார். அப்போது இருந்து இவரது கிரிக்கெட் வாழ்க்கை பின்னோக்கி செல்லாமல் தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது.

இன்று அவரது திறமைக்கு ஏற்றவாறு உயரமான இடத்தில் நிற்கிறார். அன்று துவக்க வீரராக களமிறங்கவில்லை என்றால் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை தலைகீழாகவே மாறி இருக்கக்கூடும்.” என்று ராகுல் டிராவிட் குறிப்பிட்டார்.