ரோகித் சர்மா 2வது டெஸ்டில் ஆடுவது மிகப்பெரிய ஆபத்து; என்ன பிரச்சினை வரும்? – முன்னாள் வீரர் கருத்து!

0
2308

இரண்டாவது டெஸ்டில் ரோகித் சர்மாவை விளையாட வைக்க கூடாது என்று கருத்து தெரிவித்திருக்கிறார் அஜய் ஜடேஜா.

பங்களாதேஷ் அணியுடன் நடந்த ஒருநாள் தொடரில் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, ஸ்லிப் திசையில் நின்று பீல்ட்டிங் செய்து கொண்டிருந்த ரோகித் சர்மா, பந்தை பிடிக்க முயற்சிக்கும்போது அதிவேகமாக வந்து அவரது கட்டை விரலில் பட்டது. வீக்கம் காரணமாக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

- Advertisement -

சிறு முதலுதவி செய்து கொண்டு அன்றைய போட்டியில் ஒன்பதாவது வீரராக களம் இறங்கி இறுதி வரை போராடினார். இனியும் ரோகித் சர்மாவின் மீது ரிஸ்க் எடுப்பது சரிவராது என மூன்றாவது ஒருநாள் போட்டி மற்றும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வைக்கவில்லை.

உடனடியாக நாடு திரும்பிய ரோகித் சர்மா, தனது மருத்துவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார். தற்போது குணமடைந்து விட்டதாகவும் மீண்டும் அணிக்கு திரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். பங்களாதேஷ் வந்தடைந்து விட்டார் என்ற தகவல்களும் வருகின்றன.

இந்நிலையில் ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடக்கூடாது. அது அவரது எதிர்காலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா.

- Advertisement -

“ரோகித் சர்மா இன்னும் சில நாட்கள் வீட்டில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டும். கட்டை விரலில் காயம் ஏற்பட்டால் பத்து நாட்களில் குணமடைந்து விடும். ஆனால் முழுமையாக பேட்டை தூக்கி விளையாடுவதற்கு போதிய வலிமை இருக்காது. ஆகையால் கூடுதலாக இன்னும் ஓரிரு வாரங்கள் ஓய்வு எடுத்தால் மட்டுமே அவரால் இயல்பாக இருக்க முடியும்.

விரைவாக விளையாட வேண்டும் என நினைத்து விளையாடினால் சில நாட்களிலேயே மீண்டும் காயம் ஏற்பட்டு அணியை விட்டு விலக நேரிடலாம். இது ரோகித் சர்மாவிற்கு ஆரோக்கியமானது அல்ல. ஏனெனில் 35 வயதில் இருக்கிறார். ஒரு சில தொடர்கள் அவர் விலகி இருந்தால் அந்த இடத்தில் வேறொரு வீரர்கள் வந்துவிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அணி நிர்வாகமும் இனி அவர்களை சார்ந்து இருந்து விடவும் வாய்ப்புண்டு.

இதனை கருத்தில் கொண்டு, ரோகித் சர்மா விளையாடுவது அவரது எதிர்காலத்திற்கு சிறந்தது அல்ல என்பதால், இன்னும் சில நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு விளையாட வருவது உகந்தது. ஆகவே இரண்டாவது டெஸ்டில் அவர் இருக்கக் கூடாது என்பது என் கருத்து.” என்றார்.