இந்திய கேப்டனாக களமிறங்க ரோஹித் ஷர்மா தயார் – காயம் குறித்து சமீபத்தில் வெளியான செய்தி

0
1009
Rohit Sharma

கடந்த ஆண்டு இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு சில மாற்றம் ஏற்பட்டது. டி20 போட்டிகளில் இனி தான் கேப்டனாக நீடிக்கப் போவதில்லை என்று கூறி விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். பின்னர் பிசிசிஐ ரோஹித் ஷர்மாவை இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக அறிவித்தது. ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனாகவும் ரோஹித் ஷர்மாவையே ஒரு சில நாட்கள் கழித்து பிசிசிஐ திடீரென அறிவித்தது.

டெஸ்ட் போட்டிக்கு மட்டும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி விளையாடும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து விராட் கோலி டெஸ்ட் பதவியிலிருந்தும் தாமாக முன்வந்து கீழே இறங்கியுள்ளார். இதனையடுத்து இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாகவும் ரோஹித் ஷர்மாவே பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

காயம் காரணமாக தற்போது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் ரோஹித்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் ரோஹித் ஷர்மாவிற்கு தசைபிடிப்பு ஏற்பட்டதால் அவரால் விளையாட முடியாமல் போனது. இதனையடுத்து அவர் தேசிய கிரிக்கெட் அகடமியில் உரிய சிகிச்சை மற்றும் பயிற்சி எடுத்து வந்தார்.

தற்பொழுது உள்ள பிசிசிஐ கோட்பாட்டின்படி ஒரு வீரர் காயம் அடைந்து விட்டால், அவர் குணமடைந்து தேசிய கிரிக்கெட் அகடமியில் உள்ள உடற்பயிற்சி பரிசோதனையில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்ற விளையாட முடியும். அதன் அடிப்படையில் ரோஹித் ஷர்மாவின் காயம் தற்பொழுது குணம் அடைந்து விட்டதாகவும், கூடிய விரைவில் உடற்பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய அணியில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக கேப்டனாக களம் இறங்கும் ரோஹித்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் ஷர்மா இல்லாத காரணத்தினால் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி விளையாட போகின்றது. பின்னர் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடைபெற இருக்கின்றது.

- Advertisement -

காயம் முழுவதுமாக குணமடைந்து உடற்பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்று, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவிருக்கின்ற ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடர்களில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கி விளையாட போகின்றது.

இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் பதவியிலும் பிசிசிஐ ரோஹித் ஷர்மாவையே தொடர வைக்க முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. கேஎல் ராகுல் சிறப்பான வீரர் என்றாலும் போதுமான அனுபவம் அவருக்கு இல்லாத காரணத்தினாலும், தற்பொழுது உள்ள வீரர்கள் மத்தியில் ரோஹித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தக் கூடிய ஆற்றல் பெற்றவர் என்கிற காரணத்தினாலும் ரோஹித் ஷர்மாவுக்கே கேப்டன் பதவியை கூடியவிரைவில் பிசிசிஐ கொடுக்கப் போவதாக செய்து உறுதியாகியுள்ளது.

ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்திலும் விளையாட போகின்றது. ரோஹித் ஷர்மா கேப்டனாக இருக்கும் நேரத்திலேயே, வருங்கால இந்திய அணியின் கேப்டன் யார் என தீர்மானிக்கும் வேலையும் நடக்கப் போவதாக தெரியவந்துள்ளது.

ரோஹித் ஷர்மா சில ஆண்டுகள் கேப்டனாக தனது பணியை நிறைவேற்றி முடித்ததும், பிசிசிஐ தேர்ந்தெடுத்து வைத்த அந்த இளம் கேப்டன் தலைமையில் அடுத்து நான்கு முதல் ஐந்து வருடங்களுக்கு இந்திய அணி விளையாட போவதாகவும் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.