சொல்லி அடித்த ரோகித் சர்மா- மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போட்ட ட்வீட் வைரல்

0
2880
Rohit Sharma Test Cricket

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித். பல ஒரு நாள் மற்றும் டி20 ஆட்டங்களின் துவக்கத்தில் இவர் கொடுத்த அதிரடியால், இந்திய அணி பல ஆட்டங்களில் எளிதாக வென்று இருக்கிறது. விராட் கோலி இல்லாத சமயம் பல நேரங்களில் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி உள்ளார். ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார் ரோகித். இவ்வளவு இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் என்றால் பல காலமாக ரோகித் இதற்கு சரிவர மாட்டார் என்ற பேச்சு தான் இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகவும் பொறுமை அவசியம்.. அது ரோகித்திடம் இல்லை என்று பலர் கூறி வந்தனர்.

ஆனால் அதை எல்லாம் மாற்றி கடந்த 2019ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலும் துவக்க வீரர் ஆனார் ரோகித். சதம் இரட்டை சதம் என தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தொடர்ந்து அடித்து அசத்தினார். ஆனாலும் இந்தியாவில் சிறப்பாக பேட்டிங் செய்யும் இவரால் வெளிநாட்டு மைதானங்களில் நிலைத்து ஆட முடியவில்லை என்று விமர்சனம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. அதற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக ரோகித் அதிக பந்துகள் பிடித்து ஆட ஆரம்பித்தார். ஆனாலும் அவரிடம் இருந்து பெரிய ஸ்கோர் எதுவும் வரவில்லை.

- Advertisement -

தற்போது நடந்து வரும் இங்கிலாந்து தொடரின் முதல் ஆட்டத்திலும் ரோகித் சரியாக 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிக பந்துகளை பிடித்த பிறகும் அவரால் பெரிய ஸ்கோர் அடிக்கடி முடியவில்லை. ஆனால் தற்போது நடக்கும் இரண்டாவது டெஸ்ட்டில் அதையும் முறியடித்து விட்டார் ரோகித். பந்துவீச்சுக்கு சாதகமாக சூழ்நிலைகள் இருந்தாலும் பொறுமையாக ஆடி ரன்கள் சேர்த்தார். எந்தப் பந்தை விட வேண்டும், எந்தப் பந்துகளை அடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து 83 ரன்கள் குவித்தார் ரோகித். சாம் குர்ரனின் ஒரே ஓவரில் நான்கு பவுண்டரிகள் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

சதம் அடிப்பார் என்று நினைத்த ரசிகர்கள் ஏமாந்தாலும் ரோகித்தின் பழைய ட்வீட் ஒன்றை தற்போது வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். கடந்த 2018ம் ஆண்டு இங்கிலாந்தில் வைத்து ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் சிறப்பாக ஆடியிருந்தாலும் டெஸ்ட் தொடருக்கு ரோகித் புறக்கணிக்கப்பட்டார். அப்போது “நான் சூரியன் போல மீண்டும் எழுந்து வருவேன்” என ஒரு ட்வீட் போட்டிருந்தார். எந்த இங்கிலாந்து நாட்டில் புறக்கணிக்கப்பட்டாரோ அதே நாட்டில் தற்போது தான் யார் என்று நிரூபித்து விட்டார் என ரசிகர்கள் அந்த ட்வீட்டை வைரலாக்கி வருகிறார்கள்.