அடிப்பட்ட சிங்கத்தின் மூச்சுக் காற்று.. களத்தில் குதித்த கேப்டன் ரோகித் சர்மா

0
10021

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறியது. இந்திய அணியின் சொதப்பலுக்கு காரணம் தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக விளையாடவில்லை என்று புகார் எழுந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கில் ஏமாற்றினார். நெதர்லாந்துக்கு எதிராக அரைசதம் விளாசிய அவர், மற்ற போட்டியில் சொதப்பினார்.

இந்த நிலையில், நியூசிலாந்து தொடரில் ரோஹித் சர்மா ஓய்வெடுத்ததற்கு பல்வேறு முன்னாள் வீரர்களும் மறைமுகமாக விமர்சனம் செய்தனர். டி20 உலக கோப்பையில் தோல்வியை தழுவியதால் ரோகித் கேப்டன் பதவியை விட்டு ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் சிலர் பேசி வருகின்றனர். இந்த நிலையில் தான் வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் வரும் டிசம்பர் நான்காம் தேதி தொடங்குகிறது.

இந்தத் தொடருக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் ரோகித் சர்மா மும்பையில் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளார். தனது உடல் எடையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரோகித் சர்மா, தனது பேட்டிங்கில் பல அதிரடி மாற்றத்தை காட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதனால் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா பழையபடி பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா ஜொலிக்காமல் போனதற்கு காரணம் அவர் தன்னுடைய பேட்டிங் ஸ்டைலை மாற்றியது தான் பிரச்சினையாக அமைந்தது. ரோகித் சர்மா எப்போதும் போல் பயமின்றி அதிரடியாக ஆடி இருந்தால் அவர் அதிக ரன்களை பெற்று இருப்பார். ஆனால் ஆஸ்திரேலியா ஆடுகங்களில் தொடக்க வீரர்கள் வேகப்பந்துவீச்சை சமாளிக்க வேண்டும் என்று அமைதி காத்ததால் தான் அவருடைய ஆட்டம் பாதிக்கப்பட்டது.

இந்தத் தவறை திருத்திக் கொண்டாலே அவர் பழைய ஆட்டத்திற்கு திரும்பி விடுவார். ரோகித் சர்மா டி20 உலக கோப்பையை இழந்தாலும் அவருக்கு அடுத்த ஆண்டு இன்னும் பெரிய ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது. இந்தியாவில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் உலகக் கோப்பை 50 ஓவர் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் இந்தியா உலக கோப்பையை வெல்ல ரோகித் காரணமாக அமைந்தால் வரலாற்றில் இடம் பிடித்து விடுவார்.

இதேபோன்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு ஜூனில் நடைபெறுகிறது. இதில் இந்தியா தொடர்ந்து இந்தியா ஐந்து டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால், இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெறும். அப்போது அதிலும் ரோகித் சர்மா கோப்பையை வெல்ல முயற்சி செய்யலாம். தற்போது ரோகித் சர்மாவின் முதல் பயணம் வங்கதேச தொடராக உள்ளது.
வங்க தேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி, கே எல் ராகுல் ,ஜடேஜா போன்ற நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.