மாணிக்கமா இருக்க ரோகித் சர்மா, பழைய பாட்சா பாய் மாதிரி திரும்ப வரணும் – கௌதம் கம்பீர் பேட்டி!

0
218

விராட் கோலியை போன்று ரோகித் சர்மா மீண்டும் பார்மிற்கு திரும்ப வேண்டும். இல்லையென்றால் சிக்கல் அவருக்கு மட்டுமல்ல இந்திய அணிக்கும் தான் என பேசியுள்ளார் கௌதம் கம்பீர்.

சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் மூன்று வருட காலம் விராட் கோலியின் பார்ம் பேசுபொருளாகவே இருந்தது. பல விமர்சனங்களுக்கும் உள்ளாகினார் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலக நேரிட்டது.

பல விமர்சனங்களில் இருந்து மீண்டு வந்து ஆசியக்கோப்பை தொடரின் போது டி20களில் முதல் சதம் அடித்தார். அந்த ஃபார்ம் டி20 உலககோப்பையிலும் தொடர்ந்தது.

அதேபோல் ஒருநாள் போட்டிகளில் மூன்று வருடங்களுக்குப் பிறகு வங்கதேச அணிக்கு எதிராக சதம் அடித்தார். அந்த ஃபார்மை தற்போது நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் வெளிப்படுத்தினார். மூன்று போட்டிகளில் இரண்டு சதங்கள் விளாசி தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

அணியில் இருக்கும் மற்றொரு அனுபவ வீரர் ரோகித் சர்மா, 2022ல் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஒருநாள் போட்டிகளில் சுமார் 50 போட்டிகளுக்கும் மேல் சதம் அடிக்காமல் தவித்து வருகிறார்.

இலங்கை தொடரில் 83, 42 ரன்கள் என கிட்டத்தட்ட மோசமான பார்மில் இருந்து மீண்டு வந்துவிட்டாலும், அதை பெரிய ஸ்கோராக கொண்டு செல்ல முடியவில்லை என்கிற விமர்சனங்கள் வந்திருக்கிறது. இதைக் குறிப்பிட்டு தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் கௌதம் கம்பீர். அவர் கூறியதாவது:

“இந்திய அணிக்குள் இருக்கும் இரண்டு சீனியர் வீரர்களில் விராட் கோலி பார்மிற்கு வந்துவிட்டார் அடுத்ததாக ரோகித் சர்மாவின் பார்ம் மிகவும் முக்கியமானது. வருகிற உலக கோப்பைக்கு அது அவசியம் தேவைப்படுகிறது.

50-60 போட்டிகள் சதம் அடிக்கவில்லை என்ற கணக்குகள் எல்லாம் தேவையில்லை. அடுத்தடுத்து வரும் போட்டிகளில் தனது குறைந்த ஸ்கோரை சதமாக மாற்றுவதற்கு ரோகித் முயற்சிக்க வேண்டும்.

இலங்கை ஒருநாள் தொடரில் நல்ல துவக்கம் கிடைத்தது. ஆனால் அதை பெரிய ஸ்கோர் ஆக அவரால் மாற்ற முடியவில்லை. இது அணிக்கு சிக்கலாக இருந்து வருகிறது என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ரோகித் சர்மா இருக்கும் இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால், இப்போது அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார். கேப்டனாக இருப்பதால் இந்த சலுகை கிடைக்கிறதா? என்றால், இல்லை என்று கூற வேண்டும். ஏனெனில் ரோகித் சர்மாவின் அனுபவம் தான் இன்னும் அவரை அணியில் வைத்திருக்கிறது. அதைப் புரிந்து கொண்டு வருகிற உலக கோப்பைக்குள் தனது சிறந்த பார்மை வெளிக்கொண்டு வந்து அணிக்கு கூடுதல் பங்காற்ற வேண்டும்.” என்றார்.