தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் ஷர்மா நீக்கம் – பிசிசிஐ அறிவித்த மாற்று வீரர் இவர் தான்

0
442
Rohit Sharma and Priyank Panchal

இந்திய அணியின் புதிய ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக ரோஹித் ஷர்மா சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ சார்பாக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே அந்த பதவியில் கேப்டனாக இருந்த விராட் கோலியை நீக்கி புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மாவை திடீரென பிசிசிஐ நியமித்த நிகழ்வு, ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியது.

பிசிசிஐ திட்டமிட்டபடி நடக்க இருக்கின்ற தென்ஆப்பிரிக்க சுற்றில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், முதல் முறையாக முழுநேர கேப்டனாக ரோஹித் ஷர்மா இந்திய அணியை வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது ரோஹித் தென் ஆப்பிரிக்கா சுற்றில் விளையாடுவாரா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி ஆகியுள்ளது.

- Advertisement -

விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கம்

தென்னாபிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்க போகிறது. டெஸ்ட் அணியை விராட் கோலி தலைமை தாங்க, துணை கேப்டனாக ரோஹித் ஷர்மா தாங்குவார் என்றும் பிசிசிஐ சார்பில் முன்பே கூறப்பட்டது. டெஸ்ட் போட்டிகளுக்காக தற்பொழுது அனைத்து இந்திய வீரர்களும் தயாராகி வருவதை போல, ரோஹித் ஷர்மாவும் தயாராகி வந்தார்.

டெஸ்ட் போட்டிகளுக்காக தயாராகி வந்த ரோஹித் ஷர்மாவின் விரலில் காயம் ஏற்ப்பட்டுள்ள செய்தி தற்பொழுது தெரியவந்துள்ளது. அவருடைய காயம் குணமாக சில நாட்கள் தேவைப்படும் என்ற காரணத்தினால் அவர் டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சார்பில் புதிய துணை கேப்டனாக வேறு யாரும் புதிதாக நியமிக்கப்பட போவதில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி ரோஹித்துக்கு மாற்று வீரராக பிரியாங் பஞ்சால் டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்று பிசிசிஐ தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரியாங் பஞ்சால் இந்திய டெஸ்ட் அணியுடன் இணைந்த செய்தியும் தற்பொழுது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

ஒருநாள் தொடரில் ரோஹித் ஷர்மா விளையாடுவாரா

டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறிய ரோஹித் காயத்திற்கான முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக அவரது காயம் குணமாகி விட்டால், நிச்சயமாக அவர் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக விளையாடுவார் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஒருவேளை அவரது காயம் குணமாக காலதாமதம் ஏற்பட்டால், ஒருநாள் தொடரில் இருந்தும் அவர் வெளியேற்றப்படுவார்.

இந்த செய்தி அவரது ரசிகர்கள் உட்பட இந்திய ரசிகர்களையும் வருத்தமடைய செய்துள்ளது. கூடிய விரைவில் அவரது காயம் குணமாகி ஒருநாள் தொடரில் அவர் கேப்டனாக விளையாட வேண்டுமென அனைத்து ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.