2வது டெஸ்டிலிருந்து ரோகித் சர்மா நீக்கம்; அணி நிர்வாகம் சொன்ன காரணம் இதுதான்!

0
1404

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் ரோகித் சர்மா நீக்கப்பட்டிருக்கிறார். அணி நிர்வாகம் இந்த முடிவினை எடுத்திருக்கிறது.

வங்கதேசம் அணியுடன் நடந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியின் போது, கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் ரோகித் சர்மா ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்று அணி நிர்வாகம் அறிவித்தது.

- Advertisement -

உடனடியாக இந்தியாவிற்கு சென்ற ரோகித் சர்மா தனது சொந்த மருத்துவர்களிடம் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். காயத்தில் இருந்து குணமடைந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதாக அணி நிர்வாகத்திடம் விருப்பம் தெரிவித்தார்.

இது குறித்து அணி நிர்வாகம் ஆலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்தனர். முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின், ரோகித் சர்மா குறித்த ஆலோசனை நேர்ந்திருக்கிறது. அப்போது, “ரோகித் சர்மா குணமடைந்திருக்கிறார். ஆனால் உடனடியாக அவரை விளையாட வைத்தால் மீண்டும் காயம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வைத்து மிகப்பெரிய ரிஸ்கை எடுக்க முடியாது. கேப்டனாக இருக்கும் அவருக்கு கூடுதல் பொறுப்பும் இருக்கிறது. ஆகையால் இன்னும் சில நாட்கள் ஓய்வு கொடுக்கலாம்.” என முடிவெடுத்து இருக்கின்றனர்.

இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ரோகித் சர்மா விளையாடமாட்டார் என தெரிய வந்திருக்கிறது. இதற்கான முழு அறிக்கை 19ஆம் தேதி மாலை வெளியிடப்படும் என்றும் நிர்வாகத்தினரிடமிருந்து தகவல்கள் வந்திருக்கிறது.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியின் போது ரோகித் சர்மாவிற்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்டு இருந்த அபிமன்யு ஈஸ்வரன் இரண்டாவது போட்டியிலும் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இரண்டாவது டெஸ்டை முடித்துவிட்டு இந்திய அணி நாடு திரும்புகிறது. ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பிறகு, இலங்கை அணியுடன் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடவுள்ளது. தலா மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியல் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என்றும் அணி நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.