ஆசியக் கோப்பையில் 4 சாதனைகளோடு ரோகித் சர்மா அபார சதம்!

0
61
Rohit sharma

நடப்பு 15ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் வாழ்வா சாவா போட்டியில் இலங்கை அணியோடு மோதி வருகிறது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் இந்திய அணி நீடிக்க முடியும். இல்லையென்றால் இந்திய அணி ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பே வெளியேறும்.

இந்த சூழலில் இந்த போட்டி நடைபெறும் நிலையில் இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ரவி பிஷ்னோய்க்கு பதிலாக அஸ்வின் அணியில் இடம் பெற்றார். இலங்கை அணியில் எந்த ஒரு மாற்றங்களும் செய்யப்படவில்லை.

இந்திய அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் களம் இறங்கினார்கள். ஆனால் இந்த ஜோடியால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை போல நல்ல துவக்கத்தை தரமுடியவில்லை. கேஎல் ராகுல் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் வெளியேறினார். அதற்கடுத்து வந்த விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் மதுசங்க பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

இந்திய அணி மிகப்பெரிய நெருக்கடிக்கு வாழ்வா சாவா ஆட்டத்தில் சிக்கியது. இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தன் பழைய ஆட்டத்தை மீட்டு எடுத்து வந்தார். பவர் பிளேயில் ரன்கள் அடிக்க வில்லை என்றால் பின்பு சிக்கலாகும் என்பதால் துணிந்து ரன்களை குவிக்க ஆரம்பித்தார்.

ரோகித் சர்மா ஒரு முனையில் இலங்கை அணியின் பந்துவீச்சை நாலாபுறங்களிலும் சிதறடித்து ஆரம்பிக்க, சூரியகுமார் யாதவ் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தார். மிகச் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா டி20 சர்வதேச போட்டிகளில் தனது 32வது அரை சதத்தை அடித்தார். இதன்மூலம் விராட் கோலியின் டி20 அரைசத உலக சாதனையை சமன் செய்தார். 5 பவுண்டரி 4 சிக்சர் என ரோகித் சர்மா 41 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதற்கடுத்து உடன் விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதற்குப் பின்பு வந்த ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தீபக் ஹூடா அதிரடியாக ஆடி ரன்களை குவிக்க வேண்டிய நேரத்தில் மிகச் சரியாக விக்கெட்டை இழந்து இந்திய அணியை நெருக்கடியில் தள்ளினார்கள். ஆசிய கோப்பை தொடரில் முதல் வாய்ப்பை பெற்ற அஸ்வின் இறுதி நேரத்தில் 7 பந்துகளில் 15 ரன்கள் அடித்து இந்திய அணியை 20 ஓவர்களில் 173 ரன்களுக்கு கொண்டுவந்தார்.

ரோகித் சர்மா இன்று அடித்த அரை சத ரன்கள் மூலம் ஆசிய கோப்பையில் 4 சாதனைகளை படைத்திருக்கிறார்.

  1. ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்.
  2. ஆசிய கோப்பையில் ஆயிரம் ரன்களை முதலில் கடந்த இந்தியர்.
  3. ஆசிய கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர்.
  4. ஆசிய கோப்பையில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர்.