முக்கிய உலக சாதனையை தவறவிட்ட ரோகித்-கோலி; ஹர்திக் பாண்டியா கேப்டன்; புது ரூட் போடும் டிராவிட்!

0
487
Hardikpandya

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றி தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த ஒருநாள் தொடரில் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இதே பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

கடந்த போட்டியில் இஷான் கிஷான் சூரியகுமார் ஆகியோரை பேட்டிங்கில் பரிசோதனை செய்து பார்ப்பதற்காக டாஸ் வென்றும் முதலில் பேட்டிங் செய்யாததை மனதில் வைத்து, தற்பொழுது அதற்கு பரிகாரம் செய்யும் விதமாக பயிற்சியாளர் டிராவிட் ஒரு முக்கிய காரியத்தை செய்திருக்கிறார்.

என்னவென்றால், இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக வந்திருக்கிறார். மேலும் சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் பட்டேல் இருவருக்கும் விளையாடும் அணியில் வாய்ப்பு தரப்பட்டு இருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்து விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து விளையாடி இருக்கும் பட்சத்தில், அவர்களிடையே இரண்டு ரன் பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5000 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற உலகச் சாதனையை படைத்திருப்பார்கள். தற்பொழுது இந்தச் சாதனை தள்ளிப்போய் இருக்கிறது.

- Advertisement -

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் 85 இன்னிங்ஸ்களில் 4998 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் குவித்திருக்கிறார்கள். இன்னும் இரண்டு ரன்கள் எடுக்கும் பொழுது உலகச் சாதனை இந்த ஜோடியின் வசம் வரும். முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் துவக்க ஜோடியான கிரீனீஜ் மற்றும் ஹெய்ன்ஸ் ஜோடி 97 இன்னிங்ஸ்களில் 5000 ரன் குவித்து இருக்கிறது.

இந்த போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் பெறாதது குறித்து பேசி உள்ள தற்காலிக கேப்டன் ஹர்திக் பாண்டியா ” நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவே எதிர்பார்த்தோம். சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் இந்த ஆடுகளத்தில் எவ்வளவு ரன்கள் எடுக்க முடியும் என்று பார்க்க வேண்டும். ரோகித் சர்மாவும் விராட் கோலியும் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். எனவே அவர்களுக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நீங்கள் 115 ரன்கள் ஒரு அணியை ஆல் அவுட் செய்தால் அது பந்துவீச்சாளர்களின் மிகச்சிறப்பான முயற்சி. நாங்கள் முதல் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளை இழந்ததற்கு பதிலாக இரண்டு விக்கெட்டுகளை இழந்து இருந்தால் சரியாக இருந்திருக்கும். ரோஹித் மற்றும் பிராட்டுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் படேல் இருவரும் வந்திருக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!