கோலிக்கு இது புதுசு இல்லை ரோகித்; கோலிக்கு பெருமை சேர்த்து விட்டோம் பாபர்; இரு அணி கேப்டன்களின் ஆட்டம் பற்றிய பேச்சு!

0
13572
Rohitsharma Babarazam

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டிகள் என்றால் அதற்குள் எங்கிருந்து திருப்பங்கள் நுழைந்து இதயங்களை வெடிக்கச் செய்யும் பரபரப்புகள் உண்டாகும் என்றே தெரியாது. ஆட்டம் மதில் மேல் பூனை போன்று கடைசிவரை செல்வதுதான் வழக்கம்.

எட்டாவது டி20 உலக கோப்பையில் இன்று இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டியும் இந்த பழக்கத்திற்கு விலக்காக அமையவில்லை. முடிவு எட்டப்பட ஆட்டத்தின் கடைசி பந்து வரை போனது இல்லாமல், அதற்குள் நோபால், பிரீ ஹிட், அதில் ஒரு போல்ட், அதில் 3 ரன்கள், ஒரு ரன் அவுட், ஒரு வைட் என இரு நாட்டு ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்த போட்டியை பார்த்த அத்தனை பேரையும் ரத்த அழுத்தத்திற்கு உள்ளாக்கி விட்டது இந்த ஆட்டம்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியுடனான ஆசிய கோப்பை தொடரில் சதம் அடித்த விராட் கோலி, அதற்கடுத்து உள்நாட்டில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணியுடன் நடந்த டி20 போட்டியில் இயல்பாக விளையாட ஆரம்பித்தார். இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பழைய விராட் கோலியாக முழுமையாக திரும்பி வந்துவிட்டார் என்று கூறவேண்டும். 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்த அவர் அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாகக் கடைசி வரை களத்தில் நின்றார். ரோகித் சர்மாவுக்கு கேப்டனாக இந்த ஆட்டம் மிகவும் முக்கியமாகும்.

இந்தப் போட்டியில் முடிவுக்கு பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா ” என்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை. நாங்கள் எப்போதும் ஆட்டத்திற்குள் இருப்பதைப் பற்றி அதிகம் பேசுகிறோம். எங்களால் முடிந்த வரை ஆட்டத்தை இழுத்துச் செல்லவேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். விராட் கோலி ஹர்திக் பாண்டியா பார்ட்னர்ஷிப் எங்கள் ஆட்டத்தை மாற்றியது. இருவரும் சிறந்த அனுபவசாலிகள். பந்துவீச்சில் நல்ல வேகம் மற்றும் ஸ்விங் இருந்தது. நாங்கள் இதை பந்துவீச்சில் நல்ல முறையில் பயன்படுத்தி முன் நோக்கி சென்றோம். அவர்கள் பேட்டிங்கில் நடுவில் நல்ல முறையில் செயல்பட்டார்கள்” என்றவர்…

மேலும் தொடர்ந்து “இந்த ஆடுகளத்தில் இந்த இலக்கை எளிதாக எட்ட முடியாது என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த ஆட்டத்தில் அமைதியாக இருந்து கடைசி வரை போவது மிகவும் முக்கியம். இதை இருவரும் மிக அழகாக செய்தார்கள். நாங்கள் முதலில் விளையாடியது, பின்பு மீண்டு வந்து வெற்றி பெற்றது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. விராட் கோலிக்கு இது சிறந்த இன்னிங்ஸ் ஆக இருக்காது. ஆனால் அவர் இந்தியாவுக்காக விளையாடியதில் இது சிறந்த இன்னிங்ஸ் ஆக இருக்கும். இங்கு வந்து எங்களுக்கு ஆதரவளித்த எல்லோருக்கும் நன்றி. நான் ஆஸ்திரேலியா வரும் போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் வந்தேன் ” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் கூறும்பொழுது ” இது ஒரு இறுக்கமான ஆட்டம். எங்கள் பந்துவீச்சில் நாங்கள் நன்றாக தொடங்கினோம். ஆனால் அதற்குப் பிறகு எல்லா புகழும் ஹர்திக் மற்றும் விராட் கோலிக்குதான். அவர்கள் நிதானமாக ஆரம்பித்து பின்பு வேகத்தை மாற்றி ஆட்டத்தை அழகாக முடித்து விட்டார்கள். புதிய பந்தில் கொஞ்சம் ஸ்விங் இருந்தது. இது எளிதானது கிடையாது. நாங்கள் எங்கள் அணி வீரரிடம் நம்பிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டோம். ஆனால் இறுதியாக விராட் கோலிக்குதான் பெருமை சேர்த்தோம். எங்களுக்கு ஒரு விக்கெட் நடுவில் தேவைப்பட்டது. அதனால்தான் முக்கிய பந்துவீச்சாளர்களை பந்துவீச வைத்தோம். இப்திகார் விளையாடிய விதம் மற்றும் ஷான் மசூத் ஆட்டத்தை முடித்த விதம் சிறப்பாக இருந்தது” என்று கூறியுள்ளார்.