“4 ஓவர் முழுசா வீச முடியலன்னு தான் ஒரு ஓவர் கொடுத்தோம்.. ஆனால் இப்போ எப்படி இருக்காருன்னா?” – சமி பற்றி பேசிய ரோகித் சர்மா!

0
1294

சமியின் உடல்நிலை குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ரோகித் சர்மா.

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று அக்டோபர் 22 ஆம் தேதி துவங்குகிறது. தகுதிச்சுற்று அடிப்படையில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் குரூப் ஏ பிரிவிலும், ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து குரூப் பி பிரிவிலும் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அக்டோபர் 22ஆம் தேதி நடைபெறும் சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் மோதுகின்றன. அடுத்த நாள் அக்டோபர் 23ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வதற்காக இந்திய அணி மெல்போன் நகரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ரோகித் சர்மா ஈடுபட்டார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக பும்பராவிற்கு மாற்றாக வந்திருக்கும் முகமது சமியின் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்திருக்கிறார்.

இது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.மேலும் பயிற்சி ஆட்டத்தின் போது எதற்காக நான்கு ஓவர்கள் கொடுக்காமல் ஒருவர் மட்டும் சமிக்கு கொடுக்கப்பட்டது என்பது குறித்தும் அவர் பதில் கூறியிருக்கிறார். அவர் கூறுகையில்,

“முகமது சமி உடல்நிலை பற்றியே எப்போதும் நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அவர் நல்ல நிலையில் தேறி வரவேண்டும் என்று முழு கவனம் செலுத்தி வருகிறோம். பயிற்சி ஆட்டத்தின் போது நான்கு ஓவர்கள் கொடுப்பதாக இருந்தோம். ஆனால் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்றால் இன்னும் மோசமாகிவிடும். ஆகையால் அவருக்கு ஒரு ஓவர் மட்டுமே கொடுக்கப்பட்டது.

உடலிநிலையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு கொண்டிருந்தார். தற்போது தனது பயிற்சியை நன்றாக முடித்திருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை மட்டும் இனி பார்த்தால் போதும் இதற்கு முன்னரும் அவர் இத்தகைய செயல்களை நிறைவேற்றி இருக்கிறார். ஆகையால் நன்றாக செயல்படுவார் என்று நம்புகிறோம்.” என்றார்.

ரோகித் சர்மா பேசியதை வைத்து பார்க்கையில் சமி நல்ல நிலையில் குணமடைந்து விட்டார். நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான பிளேயிங் லெவனில் இருப்பார் என்றும் தெரிகிறது. இது தற்போது இந்திய ரசிகர்களால் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் பரப்பப்பட்டு வருகிறது.