சஞ்சு சாம்சன் வேண்டாம், கேஎல் ராகுலை எடுக்கலாம்; இது ரோகித் சர்மா எடுத்த முடிவாம்.. ஏன்? – வெளியான தகவல்!

0
1224

ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக கே.எல். ரகுலை எடுக்கலாம் என்று ரோகித் சர்மா அறிவுறுத்தியதாக தகவல்கள் வந்திருக்கிறது.

இந்தியாவிற்கு வரவிருக்கும் இலங்கை அணி வருகிற ஜனவரி 3ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தலா 3 டி20 போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தனித்தனி அணி டிசம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. டி20 தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

ஹர்திக் பாண்டியா டி20 அணிக்கு கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். சிவம் மாவி, சுப்மன் கில், ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் முகேஷ் குமார் ஆகியோருக்கு டி20 அணியில் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களுடன் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

டி20 போட்டிகளில் இல்லாத கேஎல் ராகுல் ஒருநாள் போட்டிகளில் இருக்கிறார். சஞ்சு சாம்சனுக்கு ஒருநாள் தொடரில் இடம் கொடுக்கப்படவில்லை. அதேபோல் ஒருநாள் தொடரில் இருந்து ஷிகர் தவான் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்று வந்த சஞ்சு சாம்சன், எதற்காக வெளியேற்றப்பட்டார்? என சமூக வலைதளங்களில் கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டது.

இதற்கு பிசிசிஐ தரப்பிலிருந்து வந்த தகவலின் படி, சஞ்சு சாம்சனுக்கு பதிலாக கேஎல் ராகுலை அணியில் எடுக்கலாம் என்று ரோகித் சர்மா வலியுறுத்தியதாக தெரியவந்துள்ளது.

மோசமான பார்மில் இருக்கும் கேஎல் ராகுலை இரண்டு தொடர்களிலும் எடுக்க வேண்டாம் என்ற முடிவில் தேர்வுகுழுவினர் இருந்திருக்கின்றனர். ஆனால் ரோகித் சர்மாவின் தலையீட்டால், சஞ்சு சாம்சன் எடுக்கப்பட வேண்டிய இடத்திற்கு கேஎல் ராகுலை தேர்வுக்குழுவினர் எடுத்திருக்கின்றனர்.

2022 ஆம் ஆண்டு துவக்கத்தில் ரோகித் சர்மாவின் ஆதரவு சஞ்சு சாம்சனுக்கு இருந்திருக்கிறது. அதை ரோகித் சர்மாவே வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

“ஆட்டத்தின் போக்கை மாற்றி போட்டியை வெற்றி பெற்று தரக்கூடிய திறமை படைத்தவர் சஞ்சு சாம்சன்.” என்று ரோகித் பாராட்டி இருக்கிறார். வார்த்தைகளில் சொன்னதை செயலில் ரோகித் சர்மா காட்டவில்லை. பிளேயிங் லெவனில் போதிய வாய்ப்பு கொடுக்கவில்லை.

கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி இருக்கிறார் சஞ்சு சாம்சன். 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 330 ரன்கள் அடித்திருக்கிறார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 105 ஆகும் இவரது சராசரி 66 ஆகும்.

இரட்டை சதம் அடித்து நிரூபித்த இஷான் கிஷன் மற்றும் அனுபவமிக்க கேஎல் ராகுல் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கின்றனர். இவர்கள் போதும் என்று ரோகித் சர்மா தேர்வு குழுவினரிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் வந்திருக்கிறது.

அத்துடன் டி20 தொடரில் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. எதற்காக ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஏதேனும் ஒன்றில் இருந்தால் போதுமானது என்றும் ரோகித் சர்மா தெரிவித்ததாக பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியான தகவல்களில் தெரிகிறது. இது பேரதிர்ச்சியாகவும் இருக்கிறது.

எது எப்படியாகினும் ஹர்திக் பாண்டியா சஞ்சு சாம்சன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். அவர் பிளேயிங் லெவலில் வாய்ப்பு கொடுப்பார் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.