எங்களுக்கு சாதகமாக ஐசிசி நடக்குதா? விராட் கோலி சொன்னா அம்பயர் கேப்பாரா? – பிசிசிஐ புதிய தலைவர் தடாலடி பதில்!

0
452

இந்திய அணிக்கு சாதகமாக ஐசிசி நடந்து கொள்கிறது என்று வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி.

டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதிய போட்டியில் இந்தியாவிற்கு சாதகமாக ஐசிசி விதிமுறைகள் மாற்றப்படுகின்றன. நடுவர்கள் இந்திய அணிக்கு ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை இரு அணிகளின் கேப்டன்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் முன் வைத்தனர்.

விராட் கோலி கேட்டவுடன் நோ-பால் மற்றும் ஒயிடு கொடுத்து விடுகிறார்கள். விராட் கோலி போலியாக பீல்டிங் செய்தால் நடுவர்கள் கண்டு கொள்வதில்லை. மழைக்கு பின் மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தபோதும் இந்தியாவிற்கு சாதகமாகவே நடுவர்கள் பேசினார்கள் என்பனவற்றை குறிப்பிட்டு இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக பிசிசிஐயின் புதிய தலைவர் ரோஜர் பின்னி பேட்டி கொடுத்திருக்கிறார்.

“இது முற்றிலும் அர்த்தமற்றது. எங்களுக்கு சாதகமாக ஐசிசி நடந்து கொள்வதாக தெரியவில்லை. அனைவருக்கும் இது சமமான தொடராக நடைபெற்று வருகிறது. எதை அடிப்படையாகக் கொண்டு இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அதற்கு இடமே இங்கு கிடையாது. அனைத்து அணிகளும் சமமாக நடத்தப்படுகின்றன.

இந்திய அணி கிரிக்கெட்டில் அதிக பலம் பொருந்தியதாக இருக்கலாம். ஆனால் உலக கோப்பை போன்ற தொடரில் சமமாக நடத்தப்படுகின்றன. அப்படி சமமாக நடத்தப்படவில்லை என்றால் மற்ற அணி நிர்வாகங்கள் பார்த்துக்கொண்டு எப்படி அமைதியாக இருக்கும்?. ஓரிரு அணிகளை தவிர வேறு எவரும் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை.

போட்டியில் வெற்றி தோல்வி என்பது இயல்பு. தோல்வி ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதற்காக எதிரணி மீது இத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன் வைப்பது விளையாட்டு நியதியை மீறியது ஆகும். மனதளவில் அவர்களுக்கு யார் குற்றம் செய்தார்கள் என்பது தெளிவாகத் தெரியும். மேலும் நடுவர்கள் இப்படி ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்பதில் என்ன ஆதாரம் இருக்கிறது. அப்படி நடந்தால் இத்தனை கேமராக்கள் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியுமா? போலியான வெற்றியை இந்திய வீரர்கள் மட்டுமல்லாது, இந்திய ரசிகர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.” என்றார்.