பிசிசிஐ மீது மறைமுக தாக்கு.. ஓய்வு பெற்றது ஏன்? ராபின் உத்தப்பா விளக்கம்

0
626

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ராபின் உத்தப்பா தாம் ஓய்வு பெற்றதற்கான காரணம் என்ன என்பதை குறித்து முதல் முறையாக மௌனத்தை கலைத்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ராபின் உத்தப்பா, தான் இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு போட்டி மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டே வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் பங்கேற்கு ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கு பி சி சி ஐ அனுமதி வழங்கவில்லை. கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியில் எனக்கு இடம் கிடைக்கவில்லை.

இதனால் வெளிநாட்டு மண்ணில் விளையாடிய அனுபவம் எனக்கு கிடைக்காமல் போய்விட்டது. நான் கிரிக்கெட் விளையாட்டில் மாணவனாக விளங்குகிறேன். எனக்கு வெளிநாட்டு மண்ணில் விளையாட வேண்டும் என்ற ஆசையும் அதில் கிடைக்கும் அனுபவமும் தேவைப்படுகிறது. யாருக்கு தெரியும் எதிர்காலத்தில் நான் பயிற்சியாக கூட ஆகலாம். அப்போது வெளிநாட்டில் எனக்கு கிடைத்த அனுபவத்தை இளம் வீரர்களுக்கு  சொல்லிக் கொடுக்க முடியும்.

ஆனால் பி சி சி ஐயின் சட்ட விதிகள் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. தற்போது இந்திய கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெற்று விட்டதால் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, துபாய் போன்ற நாடுகளில் நடைபெறும் டி20 தொடரில் பங்கேற்று ஒரு கிரிக்கெட் வீரராக நான் முன்னேற முடியும் என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார். உத்தப்பா தற்போது வரும் ஜனவரி மாதம் துபாயில் நடைபெறும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் துபாய் கேப்பிட்டல் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி இருக்கிறார்.

37 வயதான ராபின் உத்தப்பா கடந்த ஐபிஎல் தொடரில் முதல் 5 போட்டிகளில் இரண்டு அரை சதம் அடித்தார். அதன் பிறகு அவருடைய பார்ம் மோசமானதால் அணியில் இடம் கிடைக்கவில்லை. ஒரு காலத்தில் இந்தியாவின் சிறந்த டி20 வீரராக ராபின் உத்தப்பா விளங்கினார். 2007 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடக்க வீரராக செயல்பட்ட உத்தப்பா அதே ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாகவும் விளங்கினார்.