ரிஸ்வான் – பாபரை சோதிக்கும் சூர்யகுமார் யாதவ் ; வெளியானது டி20 பேட்ஸ்மேன் ரேங்க் பட்டியல்!

0
6448
Sky

கிரிக்கெட் உலகில் தற்போது இரண்டு மிக முக்கியமான டி20 தொடர்கள் நடந்து முடிந்திருக்கிறது. ஏன் இந்த இரண்டு டி20 தொடர்களும் முக்கியமானது என்றால், டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக நடைபெற்ற இந்த தொடரில் மோதிக்கொண்ட அணிகள் இந்தியா, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து என மிக முக்கியமான அணிகள்!

இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுடன் தலா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி இரண்டையும் 2-1 என கைப்பற்றி இருக்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான் அணி 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி அந்தத் தொடரை 3-4 என இழந்திருக்கிறது.

ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாடிய 2 டி20 தொடர்களிலும், தாக்கம் மிகுந்த வீரராக இந்திய அணி தரப்பில் சூரியகுமார் யாதவ் இருந்தார். ஆஸ்திரேலிய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் தலா இரண்டு போட்டிகளில் தாக்கம் மிகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். தென் ஆப்பிரிக்க அணியுடன் முதல் இரண்டு ஆட்டங்களில் சூர்யகுமார் யாதவ் அடித்த 2 அரைசதங்கள் மிக முக்கியமானது. இந்தத் தொடரில் இவர் 119 ரன்கள் குவித்து இருந்தார்.

இதேபோல் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிகள் மோதிய 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய முகமது ரிஸ்வான் 316 ரன்கள் எடுத்திருந்தார். கேப்டன் பாபர் அஸம் இந்தத் தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்திருந்தார். இந்த இரண்டு தொடர்கள் நடந்து முடிந்த பிறகு ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தனது தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

முதலிடத்தில் பாகிஸ்தான் அணியின் முஹம்மது ரிஸ்வான் இருக்கிறார், அவரை விட வெறும் 16 புள்ளிகள் மட்டுமே குறைவாகப் பெற்று 838 புள்ளிகளுடன் சூரியகுமார் இரண்டாமிடத்தில் இருக்கிறார். மூன்றாம் இடத்தில் பாபர் 801 புள்ளிகளோடு இருக்கிறார். நான்காம் ஐந்தாம் இடங்களில், தென்ஆப்பிரிக்க அணியின் எய்டன் மார்க்ரம் மற்றும் இங்கிலாந்து அணியின் டேவிட் மலான் ஆகியோர் இருக்கிறார்கள்!

தற்போது பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்குபெறும் முத்தரப்பு டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரில் முஹம்மது ரிஸ்வான் பாபர் ஆசம் ஜோடி சிறப்பாக விளையாடும் பட்சத்தில் சூரியகுமார் யாதவை தாண்டலாம், ஆனால் உலகக் கோப்பை வரை விளையாடாமல் இருக்கும் சூரியகுமார் இதே புள்ளிகளுடன்தான் தொடர்வார். இந்தச் சமயத்தில் விளையாடக்கூடிய ரிஸ்வான் மற்றும் பாபர் சரியாக விளையாடவில்லை என்றால் கீழே இறங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!