இன்று மழை அபாயம்; போட்டி நடக்குமா? மைதான ஏற்பாடுகள் எப்படி உள்ளது? – அசாம் மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் தகவல்!

0
201
Ind vs Sa

தென் ஆப்பிரிக்க அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இரண்டு கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கிறது!

இந்த டி20 தொடரின் முதல் போட்டி சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டி நடந்த ஆடுகளம் முழுக்க முழுக்க பந்து வீச்சுக்கு சாதகமான ஒன்றாக இருந்தது. இதனால் பெரிய ரன்கள் எதையும் பார்க்க முடியவில்லை. போட்டி 20 ஓவர் கொண்டு நடத்தப்பட்டாலும் அதற்குரிய ரன்கள் வரவில்லை. ஆனாலும் போட்டி ரசிகர்களுக்கு பார்ப்பதற்கு ஒரு அருமையான நிகழ்வாகவே அமைந்திருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

இந்தத் தொடருக்கு முன்பு நடந்த ஆஸ்திரேலிய தொடரில் ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இந்தப் போட்டி 8 ஓவர்கள் கொண்டதாக நடத்தப்பட்டது. மிக முக்கிய காரணமாக இருந்தது, போட்டி நடந்த நாக்பூர் மைதானத்தில் ஆடுகளம் தவிர மைதானத்தை மூடி வைக்க எந்த வசதியும் இல்லாமல் இருந்ததுதான். இதனால் மைதானத்தைச் சுற்றி இருந்த ஈரப்பதம் போட்டிக்கு உகந்ததாக இல்லை.

ஈரம் காயாத புல்தரை மைதானத்தில் வீரர்கள் ஓடும் பொழுது வழுக்குவது வீரர்களுக்கு மிகப்பெரிய காயங்களை உண்டாக்கும். இதனால் எதிர்பாராத விதமாக வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையே கூட முடிவுக்கு வரலாம். அப்படி இருந்தும் கூட மைதானத்திற்கு வந்திருந்த பெரிய ரசிக கூட்டத்திற்காக 8 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.

தற்பொழுது தென் ஆப்பிரிக்க அணியுடன் இரண்டாவது போட்டி இன்று அசாம் மாநிலத்தில் கவுகாத்தி நகர மைதானத்தில் மாலை 7 மணிக்கு நடக்க இருக்கிறது. அந்த மாநில வானிலையில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாலை மூன்று மணி நேரங்கள் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மழை அபாயம் இருப்பதால் மைதான முன்னேற்பாடுகள் எப்படி இருக்கிறது என்று பார்க்கும் பொழுது, கவுகாத்தி மைதானத்திற்கு ஆடுகளத்தை மட்டும் மூடி வைக்கும் 2 எடை குறைந்த அட்டைகள் வாங்கப்பட்டு இருக்கிறது. இதனால் மிக வேகமாக மழை வந்தால் ஆடுகளத்தை மூட முடியும். மேலும் 20 கவர்கள் வாங்கப்பட்டுள்ளன. இதைக் கொண்டு முழு மைதானத்தையும் மூடிவிட முடியும். இதனால் மைதானத்தில் மற்றும் ஆடுகளத்தில் எந்த வித ஈரப்பதமும் தங்காது.

இந்த ஏற்பாடுகள் குறித்து அசாம் மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் தேவஜித் சைகியா கூறும்பொழுது ” இந்த இறக்குமதி செய்யப்பட்ட 20 கவர்கள் ஆடுகளம் மற்றும் மைதானத்தில் ஈரப்பதம், நீர் ஆகியவற்றை ஊடுருவாமல் மொத்தமாகத் தடுக்கும். இதனால் மழைக்குப் பிறகு போட்டிக்கு தயாராவது எளிதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்!