அவசர அவசரமாக மும்பைக்கு மாற்றப்படுகிறார் ரிஷப் பண்ட்! என்ன காரணம்?

0
565

ரிஷப் பண்ட், டேராடூனில் இருந்து மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல்கள் வந்திருக்கிறது.

இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், கடந்த டிசம்பர் 30ஆம் தேதி டெல்லியில் இருந்து டேராடூன் சென்று கொண்டிருக்கையில் ரூர்கி பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அருகில் இருந்து டேராடூன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், தலைப்பகுதியில் வெட்டு காயங்கள், மூட்டு மற்றும் கணுக்காலில் படுகாயங்கள் இருப்பதாக தெரிவித்தனர்.

தற்போது வரை டேராடூனில் சிகிச்சை மேற்கொண்டு வந்த ரிஷப் பன்ட், உடனடியாக மும்பைக்கு மாற்றப்பட உள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல்கள் வந்திருக்கிறது. அவர்கள் கூறியதாவது:

“தலைப்பகுதியில் ஏற்பட்ட வெட்டு காயங்களுக்கு சிகிச்சைகள் நடந்து முடிந்திருக்கிறது. அதன்பிறகு மூட்டு பகுதியில் ஜவ்வு கிழிந்து இருப்பதால் அதற்கு சிகிச்சை மற்றும் கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கும் சிகிச்சைகள் மேற்கொள்வதற்கு மும்பைக்கு அழைத்து வரப்பட உள்ளார்.

பிசிசிஐ-இல் உள்ள விளையாட்டு வீரர்களின் எலும்பு மற்றும் தசைப்பகுதி சிகிச்சை நிபுணர் ரிஷப் பண்ட்டை இனிமேல் பரிசோதிக்க உள்ளார். அவரது பரிசோதனையில் 100% அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே சரி செய்ய முடியும் என உறுதி செய்யப்பட்டால், உடனடியாக யுகே அல்லது யுஎஸ்ஏ இரண்டில் ஏதோ ஒரு பகுதிக்கு ரிஷப் பண்ட் அனுப்பப்பட உள்ளார்.” என்கிற தகவல்களை பகிர்ந்துள்ளார்.

வருகிற ஜனவரி 5ஆம் தேதி ரிஷப் பண்ட் மும்பைக்கு அழைத்து வரப்பட இருக்கிறார். அதன் பிறகு உரிய முடிவுகள் எடுக்கப்படும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என உறுதி செய்யப்பட்டால், அவர் குணமடைவதற்கு குறைந்தது எட்டு மாதம் முதல் ஒரு வருடம் வரை ஆகலாம் என்கிற தகவல்களும் வந்திருக்கிறது.