28 பந்தில் ரிஷப் பண்ட் அரை சதம் ; கபில் தேவ்வின் 30 வருடச் சாதனை முறியடிப்பு

0
79
Kapil dev and Rishabh Pant

முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த இலங்கை அணி தொடரை சமன் செய்யயும் நோக்கில் 2வது போட்டியில் களமிறங்கியது. இரண்டாவது டெஸ்ட் பெங்களூர் மைதானத்தில் பலகிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஷ்ரேயாஸ் ஐயரின் தயவால் முதல் இன்னிங்சில் 252 ரன்கள் சேர்த்தது. ஐயர் 92 ரன்கள் அடித்திருந்த போது ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். அவரைத் தவிர்த்து பண்ட 39 & விஹாரி 31 ரன்கள் அடித்தனர். கேப்டன் ரோஹித் ஷர்மா 15 மற்றும் விராட் கோஹ்லி 23 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 109 ரன்களுக்கு சுருண்டது. இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தவித்தனர். இலங்கை அணியைப் பொறுத்தவரை மாத்யூஸ் 43 மற்றும் டிக்வெல்லா 21 தவிர வேறு எந்த வீரரும் 10 ரன்களைத் தாண்டவில்லை. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தன் டெஸ்ட் கிரிக்கெட் கேரியரில் 8வது ஐந்து விக்கெட் ஹால் சாதனையை செய்தார். இந்திய மண்ணில் இதுவே முதல் முறை ஆகும்.

143 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய அகர்வால் 22 ரன்னிலும் கேப்டன் ரோஹித் ஷர்மா 46 ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்த வந்த ஹனுமா விஹாரி ஓரளவு தாக்குப்பிடித்து 35 ரன்கள் சேர்த்தார். வழக்கம் போல கோஹ்லி 13 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்து ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினார். மேலும் அவருடைய ஆவரேஜ் 50க்கு கீழ் இறங்கியது.

அனுபவ பேட்ஸ்மேன்களே திணறும் இந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் மட்டும் அதிரடியாக ஆடி அனைவருக்கும் விருந்து அளித்தார். இந்திய அணி 139/4 என திணறிய போது பவுண்டரியும் சிக்ஸரும் பறக்கவிட்டார். 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் மூலம் வெறும் 28 பந்தில் அரை சதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரை சதம் விளாசிய இந்தியர் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பின் கபில் தேவ்வின் சாதனையை முறியடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் 31 பந்தில் அரை சதம் விளாசிய ஷர்தூல் தாக்கூர் மூன்றாவது இடத்திற்கும் சேவாக் நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். அனைத்து நாட்டு கிரிக்கட்டர்கள் பட்டியலில் பண்ட் 7வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மிஸ்பா உல் ஹக் நீடிக்கிறார். அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வெறும் 21 பந்தில் இச்சாதனையை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.