எம்.எஸ்.தோனியின் சாதனையை உடைக்க காத்திருக்கும் ரிஷப் பண்ட் – முதல் டெஸ்ட்டிலேயே வரலாறு படைக்க வாய்ப்பு

0
910
Rishabh Pant and MS Dhoni

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட காத்திருக்கிறது. வரும் 26ம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக இந்த தென் ஆப்பிரிக்க தொடர் தொடங்க உள்ளது. மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட தொடராக டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லாததால் இந்த முறை விராட் கோலி தலைமையிலான அணிக்கு அதை மாற்ற நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. சமீபத்தில் இந்திய அணி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட வீரர்கள் எல்லாம் தென் ஆப்பிரிக்க தொடருக்கு திரும்புவதால் தற்போது அந்த தொடருக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு உள்ளது.

அப்படி நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு தற்போது தென் ஆப்ரிக்க தொடரில் மீண்டும் களம் இறங்க உள்ள முக்கிய வீரர்களில் ஒருவர் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். பேட்டிங் மற்றும் கீப்பிங் என இரண்டிலும் அசத்தி வரும் இவர் தான் இந்திய அணியில் முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பர். முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் தோனியின் சாதனையை உடைக்க தற்போது இவருக்கு பொன்னான வாய்ப்பு ஒன்று அமைந்துள்ளது. இதுவரை தான் விளையாடிய 25 டெஸ்ட் போட்டிகளில் 97 முறை மற்ற எதிரணி வீரர்களை ஆட்டமிழக்க வைத்துள்ளார் ரிஷப் பண்ட்.

வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேலும் மூன்று வீரர்களை ஆட்டமிழக்க வைத்தால் குறைந்த போட்டிகளில் 100 ஆட்டம் ஆட்டமிழப்புகளை செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை பண்ட் படைப்பார். இதற்கு முன்பு 36 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை நிகழ்த்தி தோனி சாதனையாக வைத்திருந்தார். மற்ற சிறந்த இந்திய விக்கெட் கீப்பர்களான சஹா 37 போட்டிகளிலும், கிரன் மோர் 39 போட்டிகளிலும், நயன் மோங்கியா 41 ஆட்டங்களிலும், சையது கிர்மானி 42 ஆட்டங்களிலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். வெறும் மூன்றே ஆட்டம் இழப்புகள் தான் தேவை என்பதால் முதல் டெஸ்ட் போட்டியிலேயே பண்ட் இந்த சாதனையை படைத்தார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.