“ரிஷப் பண்ட்டால் இதை செய்ய முடியும், சஞ்சு சாம்சன் அப்படியில்லை” – ஷிகர் தவான் பேட்டி!

0
518

ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் ஏன் சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் எடுக்கவில்லை? என்பதற்கு விளக்கம் அளித்திருக்கிறார் ஷிகர் தவான்.

நியூசிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டி கிரிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கபட்ட 50 ஓவர்களை பிடிக்க முடியாமல் 47.3 ஓவர்களில் 219 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவர் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடினர். மூன்றாவது போட்டியிலாவது சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இருப்பாரா? என எதிர்பார்க்கப்பட்டவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.

வழக்கம் போல ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் இருந்தார். ஆனால் மீண்டும் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டார். 16 பந்துகளில் 10 ரன்கள் அடித்து அவுட்டானார்.

220 ரன்களை சேஸ் செய்த நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தபோது போட்டியில் மழை வந்தது. தொடர்ச்சியாக மழை நிற்காமல் பெய்ததால் ஆட்டம் பாதியிலேயே ரத்து ஆனது.

முதல் போட்டியில் நன்றாக ஆடிய சஞ்சு சாம்சனுக்கு ஏன் அடுத்த 2 போட்டிகளிலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை? முதல் போட்டியில் மட்டும் விளையாட வைத்துவிட்டு, எதற்காக நிறுத்தி விட்டீர்கள்? என ஷிகர் தவான் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்திருக்கிறார்.

“எனக்கு நன்றாக தெரியும் சஞ்சு சாம்சன் நன்றாக விளையாடுவார் என்று. அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாகவும் பயன்படுத்தி வருகிறார். ஆனால் அவர் விளையாடும் பொசிஷன் அப்படியானது. நிச்சயம் அவர் காத்திருக்க வேண்டும்.

ஐபிஎல் போட்டிகளில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் சாம்சன் களமிறங்குவார். அதில் ஷ்ரேயாஸ் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் இருக்கின்றனர். ஆகையால் கீழ் வரிசையில் களமிறங்குகிறார். அவ்வபோது கூடுதல் பந்துவீச்சு அணிக்கு தேவைப்படும் பொழுது அவரை வெளியில் அமர்த்திவிட்டு அந்த இடத்தில் இன்னொரு ஆல்ரவுண்டரை எடுத்து வரவேண்டிய சூழல் ஏற்படுகிறது.

ரிஷப் பண்ட் எதற்காக தொடர்ந்து விளையாடுகிறார் என்றால், அவர் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பார்மிற்கு வந்து போட்டியை வெற்றி பெற்று தரக்கூடியவர். ஆகையால் அவரை நிச்சயம் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கில் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. சஞ்சு சாம்சன் எந்த இடத்தில் விளையாடுகிறார் என்பதை நீங்களும் புரிந்துகொண்டு விமர்சனங்களை முன்வைக்க வேண்டும்.” என்று பத்திரிகையாளர்களிடம் பதிலளித்தார்.