அதிகாலை நடந்த கார் விபத்தில் ரிஷப் பண்ட்டிற்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவரது நிலை எப்படி இருக்கிறது? என்பது தெரியவந்துள்ளது.
இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், வெள்ளிக்கிழமை அதிகாலை உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே உள்ள சொந்த ஊரிலிருந்து டெல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை நடுவே இருந்த தடுப்பில் மோதி விபத்திற்கு உள்ளானார்.
விபத்து நடந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவைத்து அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மற்றொரு பெரிய மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்.
டாக்டர் சுசில் நாகர் என்பவர் தான் ரிஷப் பண்ட்டிற்கு அவசர சிகிச்சைகளை மேற்கொண்டு இருக்கிறார். அவர் தெரிவித்த தகவலின் படி, “இடது கண்ணிற்கு மேலே உள்ள நெற்றிப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் கால் மூட்டு பகுதியில் உள்ள ஜவ்வு கிழிந்துவிட்டது. முதுகு பகுதியில் உராய்வு காயங்கள் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது.
எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் எலும்பு பகுதியில் எந்தவித விரிசல்களும் ஏற்படவில்லை என தெரிந்தது. ஆனாலும் நுணுக்கமாக பார்ப்பதற்கு உடனடியாக அருகில் இருக்கும் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.” என்றார்.
இந்த விபத்து பகுதியை பார்வையிட்ட காவல்துறை இயக்குனர் அசோக் குமார் கூறுகையில், “அதிகாலை 5:30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. முகமதுபூர் ஜத் பகுதியில் விபத்து நடந்துள்ளது. ரிஷப் பண்ட் தூக்க கலக்கத்தில் கண் அசந்திருக்கிறார். அப்போது இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பு பகுதியில் மோதியவுடன் கார் தீப்பிடித்து விட்டது. ஆனால் அதற்கு முன்னரே ரிஷப் பன்ட் வெளியே வந்துவிட்டார்.
தீ காயங்கள் எதுவும் அவருக்கு ஏற்படவில்லை. ரூர்க்கி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். அதன் பிறகு டேராடூன் பகுதியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.” என்றார்.
தற்போது எப்படி இருக்கிறார்?
ஆரம்பகட்ட சிகிச்சைகள் கொடுக்கப்பட்டுவிட்டன. தலைப்பகுதி மற்றும் கால் ஜவ்வு கிழிந்திருக்கும் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் அவர் இல்லை. தலைப்பகுதியில் மட்டும் கவனமாக கையாள வேண்டியுள்ளது என மருத்துவர் தரப்பிலிருந்து தகவல்கள் வந்துள்ளது.
25 வயதே ஆன ரிஷப் பண்ட், ஜனவரி 3ஆம் தேதி துவங்கவிருக்கும் இலங்கை அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் எடுக்கப்படவில்லை. ஆகையால் பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய அகடமிக்கு இன்னும் ஓரிரு தினங்களில் அவர் செல்வதாக இருந்தது. அதற்குள் இப்படி நடந்ததால் ரசிகர்கள் மட்டுமல்லாது சக இந்திய வீரர்கள் பலரும் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர். விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு வருகின்றனர்.