ஐபிஎல் இல் ரிஷப் பண்ட் எங்கள் அணி உடனே இருக்க வேண்டும் – ரிக்கி பாண்டிங் எதிர்பார்ப்பு!

0
239
Ricky Ponting

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக, விபத்தில் சிக்கி ரிஷப் பண்ட் இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட முடியாதது அமைந்திருக்கிறது!

இது மட்டும் அல்லாமல் இந்த தொடர் முடிந்து ஐபிஎல் தொடர் மார்ச் இறுதியில் ஆரம்பிக்க இருக்கிறது. இந்தத் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்து வருபவர் ரிஷப் பண்ட். மேலும் விக்கெட் கீப்பர் முக்கிய பேட்ஸ்மேன் என்ற வகையில் இவர் டெல்லி அணியின் முதுகெலும்பான வீரர். தற்பொழுது இவர் விளையாட முடியாதது அந்த அணிக்கு பேரிழப்பு!

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு பயிற்சியாளராக இருப்பவர் ரிக்கி பாண்டிங். தற்பொழுது அவர் ரிஷப் பண்ட் மற்றும் ஐபிஎல் தொடர் பற்றி சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்!

ரிஷப் பண்ட் பற்றி ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது ” நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். நான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் அவரிடம் சொன்னேன். இது மிகவும் திகிலூட்டும் பயமுறுத்தும் நேரம். அவரை அறிந்த எல்லோரும் அவரை நேசிக்கிறார்கள். எல்லோரையும் பிடிக்க வைக்கக்கூடிய இளைஞர் அவர். நாங்கள் அவருக்காக பிரார்த்தனை செய்வோம் காத்திருப்போம். அவர் விரைவில் மீண்டு வர வேண்டும்” என்று கூறி இருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” அணியில் அவருக்கு பதிலான ஒரு மாற்று வீரரை தேர்ந்தெடுப்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. அவருக்கு விளையாடுவதற்கு முழு உடல் தகுதி இல்லை என்றாலும் அவருடன் நாங்கள் சுற்றி இருக்க விரும்புகிறோம். அவர் அணியின் கலாச்சாரத் தலைவர். மேலும் கேப்டனாக இருக்கிறார். யாரையும் விரும்ப வைக்கக்கூடிய பிடித்த அவரது அந்த சிரிப்பும் அவரும் எங்களுக்கு தேவை. அவர் பயணம் செய்யக்கூடிய வகையில் இருந்து அணியுடன் இருக்க முடிந்தால் அவரை நான் வாரத்தில் எல்லா நாட்களும் டக்அவுட்டில் இருக்க விரும்புவேன் ” என்று கூறியுள்ளார்!