ரைலி ரூஸோவ் அதிரடி சதம்; சிறிய மைதானத்தில் சீறிய சவுத்ஆப்பிரிக்கா; 227 ரன்கள் குவிப்பு!

0
350
Ind vs Sa

தென் ஆப்பிரிக்க அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் முதலில் நடைபெறும் டி20 தொடரில் இந்தியா முதல் இரண்டு ஆட்டங்களை வென்று தொடரை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது!

இன்று தொடரின் கடைசி மற்றும் 3வது போட்டி இந்தூர் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் கேஎல் ராகுல், விராட் கோலி, அர்ஸ்தீப் சிங் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்கம் தர களமிறங்கிய ஜோடியில் வழக்கம்போல் கேப்டன் டெம்பா பவுமா சீக்கிரத்தில் வெளியேறினார். பேட்டிங் செய்ய சாதகமான மற்றும் சிறிய மைதானத்தில் ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக் மற்றும் ரூஸோவ் இருவரும் 4-வது ஓவரில் கைகோர்த்து 12-வது ஓவரில், எட்டு ஓவர்களுக்கு 90 ரன்கள் குவித்து அமர்க்களப் படுத்தினர். குயின்டன் டி காக் 43 பந்துகளில் 68 ரன்களை 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சருடன் அடித்து நொறுக்கினார்.

இதற்கடுத்து ரூசோவ் உடன் இளம் அதிரடி வீரர் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்து மேலும் ரன் ரேட்டை அதிரடியாக உயர்த்த ஆரம்பித்தார்கள். கடந்த இரு ஆட்டங்களிலும் ரன் ஏதும் இல்லாமல் ஆட்டமிழந்த ரூசோவ் இந்த ஆட்டத்தில் மைதானத்தின் நாலா புறங்களிலும் அடித்து நொறுக்கினார். அவரை கட்டுபடுத்துவது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சிரமமாக இருந்தது. இரண்டு ஆட்டங்களில் ரன் அடிக்காமல் விட்டதற்கு வட்டியும் முதலுமாக இந்த ஆட்டத்தில் திருப்பிக் கொடுத்து விட்டார் ரூஸோவ். மொத்தம் நாற்பத்தி எட்டு பந்துகளைச் சந்தித்த அவர் 8 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் சதம் அடித்து அசத்தினார். கடந்த போட்டியில் டேவிட் மில்லர் சதம் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது!

ரூஸோவ் – ஸ்டப்ஸ் ஜோடி 87 ரன்கள் எடுத்து பிரிந்தது. ஸ்டப்ஸ் 23 ரன்களில் வெளியேறினார். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்தது. ரூசோவ் 100 ரன்களுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார். டேவிட் மில்லர் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்து விளாசினார்!

- Advertisement -