டி20 போட்டிகளில் ரிக்கி பாண்டிங்கின் தற்போதைய தலைசிறந்த 5 வீரர்கள்; அதில் ஒருவர் கூட ஆஸ்திரேலியா இல்லை!

0
441
Ricky ponting

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனும், மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் நம்பர் 1 இடத்தில் இருந்தவரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனுமான ரிக்கி பாண்டிங், தற்போதைய கிரிக்கெட் உலகில் டி20 போட்டிகளில் மிகச்சிறந்த 5 வீரர்களை பட்டியலிட்டுள்ளார். அவரது இந்தப் பட்டியலில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் கூட இடம் பெறவில்லை என்பதுதான், அவரது இந்தப் பட்டியலின் மீது அதிக கவனத்தைக் கொடுக்கிறது!

இந்தப் பட்டியலில் முதல் இடத்தை அவர் ஆப்கானிஸ்தான் அணியின் ரசித் கானுக்கு கொடுத்திருக்கிறார். இதற்கு அவர் காரணம் கூறும் பொழுது ” நான் ரசித் கானுக்கு நம்பர் 1 இடத்தை தருகிறேன். இப்பொழுது ஐபிஎல் தொடரில் ஒரு அணி ஒரு வீரரை எவ்வளவு கொடுத்து வேண்டுமானாலும் வாங்கலாம் என்று இருந்தால், ரசித் கான்தான் அதிக விலைக்கு போவார்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

அவர் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸமுக்கு தந்திருக்கிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது ” காரணம் வெகு எளிமையானது அவர்தான் தற்போதைய டி20 பேட்ஸ்மேன்களில் முதலிடத்தில் இருக்கிறார். அவர் இதற்கு மிகவும் தகுதியானவர் ” என்றிருக்கிறார்.

ரிக்கி பாண்டிங்கின் இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வருகிறார். இதற்கான காரணமாய் ரிக்கி பாண்டிங் கூறுகையில் ” அவர் ஆட்டத்தை நன்கு புரிந்து கொண்டுள்ளார். அவர் முன்பை விட இப்பொழுது சிறப்பாக ஆட்டத்தை உணர்ந்து வந்திருக்கிறார். அவர்தான் தற்போதைய டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த ஆல்ரவுண்டர். அவரால் ஒருநாள் போட்டிகளிலும் சிறந்த ஆல்ரவுண்டராக வரமுடியும்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பட்டியலில் 4வது இடம் இங்கிலாந்து வெள்ளை பந்து கிரிக்கெட்டின் புதிய கேப்டனும் விக்கெட் கீப்பருமான ஜாஸ் பட்லருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமாய் ” இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் 4 சதங்கள் அடித்தார். மிகப்பெரிய மேட்ச் வின்னர்களில் அவரும் ஒருவர்” என்று பாண்டிங் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் இந்தப் பட்டியலில் கடைசி மற்றும் 5வது இடத்தை இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு வழங்கியிருக்கிறார். பும்ரா பற்றி பாண்டிங் கூறும்பொழுது ” தற்போதைய காலத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அவர் மிக முழுமையான பந்துவீச்சாளராக இருக்கிறார். அவரை இப்படி யாராவது பயன்படுத்த நினைத்தால் புதிய பந்தில் மிகவும் நல்லது” என்று கூறியிருக்கிறார்!