கேப்டன் ஜோ ரூட்டின் பதவி காலம் முடிவு நேரத்தை தொட்டுவிட்டது ; கேப்டனாக இவரை நியமியுங்கள் – ரிக்கி பாண்டிங் வலியுறுத்தல்

0
275
Ricky Ponting about Joe Root Captaincy

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்து அதன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிப்பத்தோடு மட்டுமல்லாமல் டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட்டது.

கடந்த ஆண்டு ஜோ ரரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி மொத்தமாக 9 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஆண்டு 9 முறை தோல்வியை சந்தித்த அணியாக இதற்கு முன் வங்கதேசம் இருந்தது. தற்பொழுது வங்கதேச அணியுடன் இணைந்து இங்கிலாந்து அணியும் கடந்த ஆண்டு 9 தோல்விகளை சந்தித்து உள்ளது.

கேப்டனாக கடந்த ஆண்டு ஜோ ரூட் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், ஒரு வீரராக பேட்டிங்கில் மிக அற்புதமாக விளையாடியிருக்கிறார். 15 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் என கடந்த ஆண்டு மட்டும் அவ்வாறு மொத்தமாக 1708 ரன்கள் குவித்துள்ளார். கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரரும் இவரே. கடந்த ஆண்டு அவருடைய டெஸ்ட் பேட்டிங் ஆவெரேஜ் 61.00 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 56.85 என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீரராக சிறப்பாக விளையாடி வரும் அவர் கேப்டனாக சொதப்பி வருகிறார் என்றும், இங்கிலாந்து அணிக்கு புதிய கேப்டன் பதவி ஏற்கும் நேரம் வந்துவிட்டது என்றும் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து கொண்டு வருகின்றனர். அவர்கள் வரிசையில் தற்பொழுது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான ரிக்கி பாண்டிங் அதே கருத்தை முன்வைத்திருக்கிறார்.

பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பதவி ஏற்றால் சிறப்பாக இருக்கும்

இங்கிலாந்து அணியின் தற்பொழுது அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டு வருகிறது. என்னைப்பொறுத்தவரையில் ஜோ ரூட் கேப்டன் பதவி காலம் முடிவு நேரத்தை தொட்டுவிட்டது. தற்பொழுது இங்கிலாந்து நிர்வாகம் டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை நியமித்தால் நன்றாக இருக்கும்.

குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் போன்ற ஒரு அனுபவம் உள்ள வீரர் இங்கிலாந்து அணியை தலைமை தாங்கி வழி நடத்தினால் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்புள்ளதாக எனக்கு தோன்றுகிறது. எனவே இங்கிலாந்து நிர்வாகம் கூடிய விரைவில் பென் ஸ்டோக்ஸ்ஸை இங்கிலாந்து அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக அறிவிக்க வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் வலியுறுத்துள்ளார்.