உலககோப்பையில் துவக்க விரராக களமிறங்குகிறாரா ரிஷப் பண்ட்? – பாகிஸ்தான் போட்டிக்கு முன்னர் வெளிவந்திருக்கும் தகவல்!

0
2217

பாகிஸ்தானுடன் நடக்கும் போட்டியில் ஒப்பனிங் இறங்குவேனா? தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார் ரிஷப் பண்ட்.

டி20 உலக கோப்பை தொடர் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இப்போட்டி மீது எதிர்பார்ப்பு உச்சத்தை அடைந்திருக்கிறது. பிரபல ஹாலிவுட் ஹீரோக்கள் பேசும் அளவிற்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்காக இந்திய அணி தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பும்ரா இல்லாததால் இந்திய அணி சற்று பின்னடைவை சந்தித்து இருக்கிறது என்று கூறலாம். ஆனாலும் பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி செயல்படும் விதம் பந்துவீச்சாளர்கள் மீது கூடுதல் நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. குறிப்பாக டெத் ஓவர்களில் நன்றாக பந்து வீசி வருகின்றனர்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது காலில் கட்டு போட்டுக்கொண்டு அமர்ந்திருந்த ரிஷப் பன்ட் பற்றி பல்வேறு பேச்சுக்கள் அடிபட்டன. அதற்கு தனது சமீபத்திய பேட்டிகளில் அவர் பதில் அளித்திருக்கிறார். மேலும் கடந்த முறை இந்தியா-பாகிஸ்தான் அணி மோதிய போது நடந்த நினைவுகள் மற்றும் தற்போது அதற்காக எதிர்கொண்டு வரும் பயிற்சிகள் என பலவற்றையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

அப்போது கூறுகையில், “எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. 2021 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் ஹாசன் அலி பந்து வீசிக்கொண்டிருந்த போது, இரண்டு சிக்ஸர்கள் அடித்தேன். வழக்கமாக அடிப்பது போல அந்த மைதானம் இல்லை. மிகவும் கடினமாக இருந்தது. அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்த சூழலில் நானும் விராட் கோலியும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

- Advertisement -

மிடில் ஓவர்களில் எப்படி விக்கெட் இழக்காமல் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று அப்போது கற்றுக்கொண்டேன். நிச்சயம் அந்த அனுபவம் இந்த தொடரில் உதவும் என நம்புகிறேன்.” என்றார்.

கடந்த முறை பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து திணறினர். இம்முறை அது நடக்காமல் இருக்க இடது கை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் துவக்க வீரராக பாகிஸ்தான் போட்டியின் போது களம் இறக்கப்பட உள்ளார் என தகவல்கள் வெளிவந்தன. அதுபற்றி அவரிடம் கேட்டபோது,

“இதை ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் தான் முடிவு செய்ய வேண்டும். அணியின் தேவை எது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் எடுக்கும் முடிவிற்கு வீரர்கள் ஆகிய நாங்கள் ஒத்துழைப்போம். தேவையான பங்களிப்பை கொடுப்பதற்கு முயற்சிப்போம். பொறுத்திருந்துதான் காண வேண்டும்.” என்றார்.