“இங்கிலாந்தை பார்த்தாவது திருந்துங்க!” – இந்திய அணியை விளாசிய சுனில் கவாஸ்கர்!

0
773
Gavaskar

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் நேற்று பஞ்சாப் மாநிலத்தின் மொகாலி நகரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்த பலப்பரீட்சையில் இந்திய அணி மிகச் சிறப்பான முறையில் பேட்டிங் செய்தது. ஆனால் பனிப்பொழிவு இருந்ததாலும் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்ததாலும் மிக எளிமையாக இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. ஆனால் வெகு நாட்களுக்குப் பிறகு ஐபிஎல் தொடரின் செயல்பாட்டின் அடிப்படையில் உமேஷ் யாதவ் இந்திய வெள்ளைப் பந்து அணியில் சேர்க்கப்பட்டார். அதேபோல் மிகப் பெரிய மாற்றமாக நேற்று தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக அணியில் தொடர்ந்தார். ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் களமிறங்க கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலிருந்தே அதிரடியில் ஈடுபட ஆரம்பித்தார். இதனால் அவர் முன் கூட்டியே விக்கெட்டையும் இழந்து வெளியேறினார். இதற்கடுத்து களத்திற்குள் வந்த விராட் கோலி அதிரடியாக ஆட முயற்சித்து 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து இணைந்த கேஎல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். வழக்கம் போல சூர்யகுமார் யாதவ் வித்தியாசமான முறையில் அதிரடி காட்ட, கேஎல் ராகுல் தனது பழைய நளினமான பேட்டிங்கை இந்த ஆட்டத்தில் மீட்டெடுத்துக் கொண்டு வந்தார். அவரது ஒவ்வொரு ஷாட்களும் பார்ப்பதற்கு கண்ணை பறிப்பதாக இருந்தது.

இந்த இருவரும் ஆட்டமிழந்த பிறகு களத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா உடன் விளையாட அக்ஷர் படேல் அனுப்பப்பட்டார். ரிஷப் பண்ட் க்கு பதிலாக அணியில் எடுக்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கிற்கு 6 முதல் 7 ஓவர்கள் விளையாடும் வாய்ப்பு இருக்கும்போது அந்த வாய்ப்பை இந்திய அணி நிர்வாகம் தருவதில்லை. அதே போல் அவரும் அதை விரும்புவதில்லை என்று தெரிகிறது.

அதேபோல் நேற்று கடைசி 2 ஓவர்கள் இருக்கும்பொழுது ஒரு பினிஷராக அதிரடியாக விளையாடாமல், ஹார்திக் பாண்டியாவுக்கு சிங்கிள் எடுத்து தரும் வேலையை செய்ய ஆரம்பித்தார். அதில் தோல்வி அடைந்து ஆட்டமிழந்து வெளியேறினார். இது நேற்றைய ஆட்டத்தில் செய்த தவறு என்றே கூற வேண்டும்.

தற்போது இது குறித்து இந்திய அணியின் முன்னாள் லெஜன்ட் வீரர் சுனில் கவாஸ்கர் தனது காட்டமான கருத்தை பதிவு செய்திருக்கிறார் “தினேஷ் கார்த்திக்கை நீங்கள் அக்சர் படேலை விட திறமையான பேட்ஸ்மேன் என்று கருதினால் நீங்கள் அவரை அவருக்கு முன்னால் அனுப்ப வேண்டும். ஆட்டத்தில் 6 அல்லது 7 ஓவர்கள் மீதம் இருந்தாலும் தினேஷ் கார்த்திக் வந்து விளையாட வேண்டும். அவரை கடைசி மூன்று நான்கு ஓவர்களுக்கு வைக்கக் கூடாது. நாம் இந்தக் கோட்பாட்டின்படி செல்வது தவறு” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “கோட்பாட்டின் படி நடக்காமல் இங்கிலாந்து கிரிக்கெட் எவ்வளவு மாறிவிட்டது என்று பாருங்கள். அவர்கள் இப்போது மிகவும் சுதந்திரமான கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். இது நடந்தால் மட்டுமே இது நடக்க வேண்டும் என்ற ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் அவர்கள் செல்வதை விட்டு விட்டார்கள். அவர்களின் வித்தியாசத்தையும் அவர்களின் கிரிக்கெட்டில் உள்ள வித்தியாசத்தையும் பாருங்கள். இந்தியா இப்படி கோட்பாட்டு அடிப்படையில் செல்லாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இந்திய அணி நடைமுறையில் நிலவும் சூழல்களைப் பார்த்து அதற்கேற்ற முடிவுகளை எடுப்பதை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் ” என்று கூறியிருக்கிறார்.