கட்டுக்கடங்கா காட்டாற்று வெள்ளம் போல ஆடுகிறார் சூரியகுமார் யாதவ்; இந்தியாவுக்கு கிடைத்த ஒரு விவியன் ரிச்சர்ட்ஸ் – முன்னாள் ஆஸி., வீரர் புகழாரம்!

0
847

சூரியகுமார் யாதவ் பேட்டிங் பார்க்கும் பொழுது எனக்கு விவியன் ரிச்சர்ட்ஸ் போல தோன்றுகிறது என புகழாரம் சூட்டியுள்ளார் டாம் மூடி.

டி20 போட்டிகளில் கடந்த ஒன்றை ஆண்டுகளாக சூரியகுமார் யாதவ் விளையாடி வரும் விதம் உலகின் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெறும் 43 இன்னிங்ஸ்கள் மட்டுமே விளையாடி 1578 ரன்கள் அடித்திருக்கிறார். இவரது சராசரி கிட்டத்தட்ட 47 ஆகும். அத்துடன் இவரது ஸ்ட்ரைக் ரேட் 180 பிளஸ் ஆகும்.

43 இன்னிங்ஸில் மூன்று சதங்கள் மற்றும் 13 அரை சதங்கள் அடித்திருக்கிறார். கடந்த ஆறு மாதங்களில் இந்த மூன்று சதங்களையும் சூரியகுமார் யாதவ் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியக்கோப்பை தொடர், டி20 உலககோப்பை தொடர் என அனைத்திலும் முக்கியமான பங்களிப்பை கொடுத்து முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இந்திய அணிக்கு இருந்து வருகிறார். தற்போது ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் இவருக்கு இடம் கொடுக்கப்பட்டு வருகிறது.

தனது பேட்டிங் மூலம் அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூரியகுமார் யாதவை கிரிக்கெட் உலகின் லெஜன்ட் விவியன் ரிச்சர்ட்ஸ் உடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரருமான டாம் மூடி.

“சூரியகுமார் யாதவ் பேட்டிங் பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. அவ்வளவு லாவகமாக பந்தை எதிர்கொண்டு அவருக்கு தேவையான திசையில் அடிக்கிறார். இதை பார்க்கையில் எனக்கு சிறுவயதில் விவியன் ரிச்சர்ட்ஸ் பேட்டிங்கை பார்த்தது போல நினைவுக்கு வருகிறது. அவரும் இப்படித்தான் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு காற்றாற்று வெள்ளம் போல பேட்டிங் செய்வார். பவுலர்கள் கதிகலங்கியதை எல்லாம் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட வீரராக சூரியகுமார் யாதவ் தெரிகிறார்.” என புகழ்ந்து பேசினார்.