இங்கிலாந்து உடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி படைத்த 5 மாபெரும் சாதனைகள்

0
296
Indian cricket team

இந்தியா இங்கிலாந்து மோதிய டி20 போட்டி தொடரை 2-1 என ரோகித் சார்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி இங்கிலாந்தோடு மோதும் முதல் போட்டி நேற்று இலண்டன் நகரின் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி 25.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு சுருண்டது. அபாரமாய் பந்துவீசிய ஜஸ்ப்ரீட் பும்ரா 19 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அவரது வேகப்பந்து வீச்சு பார்ட்னர் முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இங்கிலாந்து அணியின் பத்து விக்கெட்டையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர்.

- Advertisement -

அடுத்து 111 என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய துவக்க ஜோடியில் ஷிகர் தவானை முதல் பந்திலேயே ரன் அவுட் செய்ய கிடைத்த எளிய வாய்ப்பை ஜானி பேர்ஸ்டோ தவறவிட, அதற்குப் பிறகு இந்திய அணியின் ஒரு விக்கெட்டை கூட இங்கிலாந்து பந்துவீச்சாளர்களால் கைப்பற்ற முடியவில்லை. 18.4 ஓவர்களில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது. ரோகித் சர்மா 58 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது!

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பழைய ஐந்து சாதனைகளை உடைத்துப் புதிய ஐந்து சாதனைகளைப் படைத்திருக்கிறது.

சாதனை 1

இந்தியா இங்கிலாந்து அணிகள் நேருக்குநேர் மோதிய போட்டியில் இங்கிலாந்து அணியை மிகக்குறைந்த ரன்களில் இந்திய அணி ஒருநாள் போட்டியில் சுருட்டியிருக்கிறது.
110 ரன் – 2022
125 ரன் – 2006
149 ரன் – 1986

- Advertisement -

சாதனை 2

மொகம்மத் ஷமி 79 ஒருநாள் போட்டிகளில் 148 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்தப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் விக்கெட்டை வீழ்த்தியதின் மூலம், குறைந்த ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன் அஜீத் அகர்கர் 97 போட்டிகளில் இந்தச் சாதனையைச் செய்திருந்தார்.

சாதனை 3

இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரீட் பும்ரா 19 ரன்கள் கொடுத்து ஜேசன் ராய், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிங்ஸ்டன், பிரைடன் கார்ஸ், டேவிட் வில்லி ஆகிய ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார். இதற்கு முன் இந்தச் சாதனை குல்தீப் யாதவ் வசம் இருந்தது. அவர் 25 ரன்கள் கொடுத்து ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

சாதனை 4

இந்தியா இங்கிலாந்து மோதிய ஒருநாள் போட்டியில் இந்த பத்து விக்கெட் வெற்றியே சிறந்த வெற்றி ஆகும். இதற்குமுன் இந்தியா இதே ஓவல் மைதானத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதே சாதனையாக இருந்தது. இந்த இரு அணிகள் மோதிய ஒருநாள் போட்டியில் அதிக பந்துகள் மீதம் வைத்து வென்ற போட்டி இதுதான். 188 பந்துகள். இதற்கு முன் இங்கிலாந்து அணி 2015ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் 135 பந்துகள் மீதம் வைத்து வென்றதே சாதனையாக இருந்தது.

சாதனை 5

இங்கிலாந்தில் அதிக 50+ ஸ்கோர் செய்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை இந்திய கேப்டன் ரோகித் சர்மா படைத்திருக்கிறார்.
ரோகித் சர்மா – 14*
ராகுல் டிராவிட் – 13
விராட் கோலி – 13*
கேன் வில்லியம்சன் – 13*