விசுவாசமா இருந்த பிராவோவ தூக்கிட்டு, ஏன் அம்பதி ராயுடுவ மட்டும் வச்சுக்கிட்டோம் – சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி விளக்கம்!

0
8793

பிராவோவை நீக்கிவிட்டு எதற்காக ராயுடுவை மட்டும் அணியில் வைத்துக் கொண்டோம் என்பதற்கு விளக்கம் அளித்திருக்கிறார் காசி விஸ்வநாதன்.

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு முன்பு சிறிய அளவிலான ஏலம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் அணிகள் பங்கேற்பதற்கு முன்பு, தங்களது அணியில் இருக்கும் வீரர்களை வெளியேற்றலாம் அல்லது மற்ற அணிகளிடமிருந்து டிரேடு செய்து கொள்ளலாம் என்ற வாய்ப்பை நவம்பர் 15 ஆம் தேதி வரை பிசிசிஐ கொடுத்தது.

- Advertisement -

இதன் அடிப்படையில் அணிகள், சில வீரர்களை நீக்கிவிட்டு பலரை தக்க வைத்துக் கொண்டன. மேலும் நீக்கிய வீரர்களுக்கான பணத்தை கைவசம் வைத்துக்கொண்டு டிசம்பர் மாதம் ஏலத்திலும் பங்கேற்க காத்திருக்கின்றன.

இந்த வீரர்கள் தக்கவைப்பு மற்றும் வெளியேற்றத்தின்போது சென்னை அணி எட்டு பேரை வெளியேற்றியது. இதில் பிராவோவின் பெயர் இடம் பெற்றிருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

2010 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு அங்கமாக இருந்து வரும் இவர் தொடர்ச்சியாக பல பங்களிப்பை கொடுத்து வெற்றுக்களை பெற்று தந்திருக்கிறார். தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.

- Advertisement -

இவரை எதற்காக நீக்கினீர்கள்? என்ற தொடர்ந்து எழுப்பப்பட்ட கேள்விக்கு சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பதில் அளித்திருக்கிறார். அவர் கூறுகையில், “பிராவோ இப்போதும் சிஎஸ்கே வீரர் தான். அவருக்கு வயது 40 ஆகிறது. அடிக்கடி காயம் ஏற்படுகிறது. இதன் காரணமாகத்தான் அவரை வெளியேற்றினோம்.” என்றார்.

மேலும், ராயுடுவின் உடல் நிலையும் அவ்வபோது சரியில்லாமல் போகிறது. அவரை மட்டும் ஏன் அணியில் வைத்து விட்டீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “ராயுடு சமீப காலமாக நன்றாக செயல்பட்டு வருகிறார். பரிசோதித்ததில் உடல் நிலையும் சிறப்பாக இருக்கிறது. தோனியின் திட்டத்தில் அவரும் இருக்கிறார். ஆகையால் அவரை தக்கவைத்துக் கொண்டோம்.” என்றார்.

இத்தனை வருடம் சென்னை அணியில் பயணித்த ஜெகதீசன் ஏன் நீக்கப்பட்டு இருக்கிறார்? என கேட்டதற்கு, “தற்போது சென்னை அணியில் துவக்க வீரர்களுக்கான இடத்தில் வாய்ப்பு இல்லை. ஆகையால் அவரை தக்க வைத்துக் கொண்டால் அவரது எதிர்காலம் பாதிக்கும் என்பதற்காக வெளியேற்றி விட்டோம். நிச்சயம் வேறு அணிகளில் அவருக்கு இடம் கிடைத்து வாய்ப்பு கிடைத்தால் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.” என்றார்.