தொடர்ந்து 15-வது ஆண்டாக கலைந்த பெங்களூர் அணியின் ஐ.பி.எல் கனவு

0
99
RCB 2022

ஐ.பி.எல் இறுதிபோட்டியில் குஜராத் அணியோடு மோதும் அணி எது என்பதை முடிவு செய்யும், இரண்டாவது தகுதி சுற்றுப் போட்டியில், குஜராத் மாநில அகமதாபாத் நகரின் நரேந்திர மோதி மைதானத்தில் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் அணியும் இன்று மோதி முடித்திருக்கின்றன.

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி பெங்களூர் இன்னிங்சை துவங்க வந்த விராட்கோலி, பாஃப் டூ பிளிசிஸ் ஜோடியில் ஒரு சிக்ஸரோடு விராட்கோலி பெவிலியன் கிளம்பினார். பாஃப் டூ பிளிசின் தடுமாற்றம் இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது.

- Advertisement -

பெங்களூர் அணிக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமாய் கிடைத்திருக்கும் ரஜத் பட்டிதார் இந்தப் போட்டியிலும் மிகச்சிறப்பாக விளையாடினார். மறுமுனையில் நின்ற பாஃப் டூ பிளிசிஸ் 11வது ஓவரில் வெளியேற, சிறப்பாக விளையாடிய ரஜத் பட்டிதார் 42 பந்துகளில் 58 ரன் அடித்து வெளியேற, குறைந்தது 180 ரன்களையாவது பெங்களூர் அணி அடிக்கும் என்று இரசிகர்கள் எதிர்பார்க்க, மகிபால் லோம்ரர், தினேஷ் கார்த்திக், ஹசரங்கா, ஹர்சல் படேல் என வரிசையாக வெளியேற, இருபது ஓவர்களின் முடிவில் பெங்களூர் அணி 158 ரன்களையே சேர்த்தது. ஒரு ஐ.பி.எல் தொடரில் ப்ளேஆப்ஸ் போட்டிகளில் அதிக ரன் அடித்தவர், சதம் மற்றும் அரைசதம் அடித்த ஒரேவீரர் என்ற சாதனையை ரஜத் பட்டிதார் படைத்தார்.

அடுத்து 158 ரன் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு மொகம்மத் சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே 16 ரன்களை கொண்டு வந்தார் ஜெய்ஸ்வால். முதல் ஓவரில் ஆரம்பித்த இந்த அதிரடி ஆட்டம் முடியும் வரை நிற்கவே இல்லை. ஜெய்ஸ்வால் 21[13], சஞ்சு சாம்சன் 23[21], படிக்கல் 9[12] என வெளியேறினாலும் ஒருபக்கம் தூண்போல நின்ற ஜோஸ் பட்லர் பேட்டிங்கில் இடியென இடித்தார். 60 பந்துகளில் 106 ரன்களை குவித்தார். 18.1 ஓவர்களில் ராஜஸ்தான் இலக்கை தொட்டு பெங்களூர் அணியை வீழ்த்தி இறுதிபோட்டிக்குள் நுழைந்தது.

ஜோஸ் பட்லர் இந்த ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் 16 ஆட்டங்களில் 824 ரன்களை குவித்திருக்கிறார். ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு சீசனில் 800+ ரன்களுக்கு மேல் குவித்த மூன்றாவது வீரரானார். இதற்கு முன்னால் விராட்கோலி, டேவிட் வார்னர் இதைச் செய்திருக்கிறார்கள். இந்தத் தொடரில் இதுவரை நான்கு சதங்களை அடித்திருக்கிறார். இதற்கு முன்னால் ஒரு ஐ.பி.எல் சீசனில் நான்கு சதங்கள் அடித்தவர் விராட்கோலி மட்டும்தான். மேலும் இந்தத் தொடரில் அதிக சிக்ஸர் அடித்தவராகவும் ஜோஸ் பட்லர் இருக்கிறார். மொத்தம் 44 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். பெங்களூர் அணியின் ஐ.பி.எல் சாம்பியன் கனவு பதினைந்தாவது முறையாகவும் கனவாகவே கலைந்திருக்கிறது!

- Advertisement -