இவர்கள் ஏன் இரு மாதிரி விளையாடுகிறார்கள்? – முகமது கைப் இடம் ரவி சாஸ்திரி கேள்வி!

0
90
Ravi shasthri and Mohammed kaif

70 80களில் வெஸ்ட் இண்டீஸ் அணி யாராலும் வீழ்த்த முடியாத மிகப்பெரிய கிரிக்கெட் சக்தியாக விளங்கிய நாடு. தொண்ணூறுகளில் தேய ஆரம்பித்து இன்று அதன் முழு பலத்தையும் இழந்து உறுப்பு கிரிக்கெட் நாடுகளுடனும் தோற்கும் அளவிற்கு சரிந்துள்ளது!

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியது. இந்த இரண்டு தொடர்களையும் வெஸ்ட் இண்டீஸ் அணி மிக மோசமாக விளையாடி தோற்றது. ஒருநாள் தொடரில் ஒரு போட்டிகளில் கூட வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறமுடியவில்லை. ஐந்து டி20 போட்டிகளில் ஒன்றை மட்டுமே வெஸ்ட்இண்டீஸ் வென்றது.

இதற்கு முன்பு அயர்லாந்து அணி உடன் சொந்த நாட்டில் ஒரு தொடரை இழந்து இருந்தது. இதற்கடுத்து சொந்த நாட்டில் பங்களாதேஷ் அணியுடன் ஒருநாள் போட்டி தொடரை முழுவதுமாக இழந்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டில் எந்த ஒரு சிரத்தையும் பொறுப்பும் இல்லாததையே காட்டியது. அவர்கள் மிக சர்வசாதாரணமாக தங்களின் விக்கெட்டை பறிகொடுத்து வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இவர்களே பிற நாடுகள் நடத்தும் டி20 தொடர்களில் விளையாடும் பொழுது மிக மிக ஆபத்தான பேட்ஸ்மேன்கள் ஆக இருக்கிறார்கள். அதிரடியில் எதிரணி பவுலர்களை பறக்க விடுகிறார்கள். பந்து அடிக்கடி காற்றில் பறந்து பவுண்டரிகளை கடந்துசெல்லும். ஆனால் தங்களின் தேசிய அணிக்காக விளையாடும் பொழுது இவர்களின் அப்படியான ஆட்டம் எங்கே போகிறது என்று தெரியவில்லை. வெகுகாலமாக வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் இப்படித்தான் தங்களின் தேசிய அணிக்காக விளையாடி வருகிறார்கள்.

பல தீவுக்கூட்டங்கள் ஒன்றிணைந்து வெஸ்ட் இண்டீஸ் என்று அறியப்படுகிறது. இவர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு மட்டுமே ஒன்றாக சேர்ந்து விளையாடுகிறார்கள். மற்றபடி வேறு விளையாட்டுகளில் தனித்தனி நாடுகள் ஆகவே பங்கேற்கிறார்கள். மேலும் வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் போட்டியில் சம்பள பிரச்சனை என்று வீரர்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கிறது. இதெல்லாம் சேர்த்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை அழித்து இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது.

நேற்று இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ரவி சாஸ்திரியும் முகமது கைப்பும் இதுகுறித்து மிகப் விரிவாக பேசினார்கள். அப்பொழுது ரவிசாஸ்திரி முகமது கைப் இடம் ” வெளிநாட்டு டி20 தொடர்களில் மிகச் சிறப்பாக விளையாடும் இவர்கள் என் சொந்த நாட்டு அணிக்காக விளையாடும் பொழுது இப்படி மோசமாக விளையாடுகிறார்கள்? என்ன காரணம்? நீங்கள் ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் விளையாடி இருக்கிறீர்கள். அப்பொழுது இந்தப் பிரச்சினை குறித்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்களிடம் நீங்கள் பேசி இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த முகமது கைப் ” இந்த பிரச்சனைக்கு காரணம் என்னவென்றால் அவர்கள் வெளிநாட்டில் நிறைய போட்டிகளில் விளையாடுகிறார்கள் அதனால் நிறைய புகழையும் பணத்தையும் சம்பாதிக்கிறார்கள். இதுதான் இதில் ஒரு பெரிய வித்தியாசத்தை உண்டாக்குகிறது. இந்த வீரர்களிடம் தேசிய அணிக்காக விளையாடுவது குறித்து முன்னாள் வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் எந்தவிதமான சமாதானத்திலும் ஈடுபடவில்லை. கீரன் பொல்லார்ட் இருக்கும்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணி நல்ல முறையில் இருந்தது. அந்த அணியில் ரசல் பிராவோ சிம்மன்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தனர். பொலார்ட் அவர்களை நல்ல முறையில் பேசி புரிய வைத்து அணியில் இருக்க வைத்தார். ஆனால் அவரைப் போல் வீரர்களிடம் நடந்து கொள்ள தற்போது யாரும் இல்லை ” என்று கூறினார்!