இன்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் வரலாற்று சாதனை படைக்க, அவருக்கு எதிராக ஜடேஜா சிறப்பு சாதனை படைத்திருக்கிறார்.
இரு அணிகளுக்கும் இடையே அசாம் கட்டாக் நகரில் இரண்டாவது ஒருநாள் போட்டி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என ஆச்சரியப்படும் விதமாக அறிவித்தார்.
ஜோ ரூட் செய்த சாதனை
முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் 29 பந்துகளில் 26 ரன்கள், பென் டக்கெட் 56 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார்கள். இதைத்தொடர்ந்து ஹாரி ப்ரூக் 52 பந்தில் 31 ரன்கள், ஜோஸ் பட்லர் 35 பந்தில் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.
இதைத் தொடர்ந்து ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் அரைசதம் அடித்தார். அவருக்கு இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 40வது அரை சாதமாக பதிவானது. மேலும் இந்த அரைசத்தின் மூலமாக இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
பும்ரா உடன் இணைந்த ஜடேஜா
இந்த நிலையில் சிறப்பாக விளையாடி வந்த ஜோ ரூட் 72 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் உடன் 69 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். முதல் போட்டியிலும் ஜடேஜாவிடம் ஆட்டம் இழந்து இருந்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 13வது முறையாக ஜோ ரூட் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். பும்ராவும் இவரது விக்கெட்டை 13 முறை கைப்பற்றி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ஜோ ரூட் விக்கெட்டை அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 14 முறை கைப்பற்றி இருக்கிறார்.
இதையும் படிங்க: இப்படியும் ஒரு கிரிக்கெட் வீரரா.. வருத்தப்பட்ட கோச்சுக்கு வீடு வாங்கி தந்த ஆஷிஷ் நெஹ்ரா.. நெகிழ்ச்சி சம்பவம்
இன்றைய போட்டியில் ஜடேஜா பத்து ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டன் செய்து 35 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்திருக்கிறது. இரண்டாம் பகுதியில் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக ஆடுகளம் மாறும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.