நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்திற்குப் பிறகு, இந்திய அணியின் தேர்வு முடிவுகள் மற்றும் முகமது சிராஜ் நீக்கப்பட்டது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
குர்னூர் பிரார் சேர்ப்பு, குல்தீப் யாதவ் விடுவிப்பு மற்றும் சிராஜின் அனுபவம் ஆகியவற்றை முன்வைத்து அஸ்வின் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
முதல் நாளில் நியூசிலாந்தை 70 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் என வீழ்த்திய பிறகும், ஆட்டத்தின் இறுதியில் 243 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் என்ற நிலைக்கு நியூசிலாந்து உயர்ந்த பின்னணியில் இந்த விவாதம் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது, “குர்னூர் பிராரை திடீரென டெஸ்ட் அணிக்குத் தேர்ந்தெடுத்தீர்கள், ஆனால் அவரும் பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். அதற்காக அவர் குல்தீப் யாதவைப் போல சையத் முஷ்டாக் அலி டிராபியில் விளையாடலாமே. சிராஜ் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டியும் அணியில் இருந்து விளையாடாத நிலையில், எத்தனை பேக்கப் சீமர்கள் தேவை? இவ்வளவு பேக்கப் சீமர்கள் வேண்டுமென்றால், பத்து சீமர்களை எடுத்துக் கொள்ளுங்கள், கபில் தேவ்வையும் எடுத்துக் கொள்ளுங்கள்”
“இந்த முடிவை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சிராஜ் மெதுவாகப் பந்துவீசினாரா அல்லது நெட்ஸில் நன்றாகப் பந்துவீசவில்லையா? அதுதான் வாதம் என்றாலும், அதன் அடிப்படையில் இந்த முடிவை எடுக்க முடியாது. ஏனென்றால் சிராஜ் சுமார் ஐம்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்தியாவுக்காகச் செயல்பட்டிருக்கிறார். இப்போதும் கூட கம்போஜ் மற்றும் பிரசித் இந்தப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தலாம். ஆனால் அது இந்த விஷயத்தைச் சரியாக்கி விடாது” என்று கூறி இருக்கிறார்.