2025 ஆசியக் கோப்பை இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்யாதது நியாயமற்றது என ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது ஆசியக் கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்படாதது பெரிய சர்ச்சையாக மாறி சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரேயாஸ் ஐயர் உள்நாட்டு கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் இந்த ஆண்டு மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணியை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 175 ஸ்ட்ரைக் ரேட் மேல் 600 க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்திருந்தார். ஐபிஎல் தொடரில் மூன்று வீரர்கள் மட்டுமே இந்த அளவுக்கு பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில் 600 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். எனவே இவருக்கு இந்த முறை இந்திய டி20 அணியில் கட்டாயம் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இது குறித்து விமர்சனம் செய்துள்ள அஸ்வின் பேசும்பொழுது “ஸ்ரேயாஸ் ஐயருக்கு அணியில் இடம் பெறுவதற்கான எல்லா தகுதிகளும் இருக்கிறது. அப்படி இருந்தும் அவர் அணியில் இல்லை. ஆனால் அவர் உங்களை சாம்பியன்ஸ் டிராபி வெல்ல வைத்திருக்கிறார். கில் அபாரமான ஃபார்மில் இருப்பதாக நீங்கள் வாதிட்டால் ஸ்ரேயாஸ் ஐயரும் அப்படியான ஃபார்மில் இருக்கிறார். ஆனால் அவர் என்ன தவறு செய்தார்? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லப் போவது யார்?”
இதையும் படிங்க : கில்லுக்கு டி20 அணியின் துணை கேப்டன் பதவி ஏன்? இது நியாயமா? – கேப்டன் சூரியகுமார் தந்த விளக்கம்
“அவர் கொல்கத்தா அணிக்காக கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அவர்கள் அவரை ஏலத்தில் விட்டார்கள். பஞ்சாப் அணியை 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்பொழுது இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றிருந்தார். மேலும் அவர் தன்னுடைய ஷார்ட் பால் பிரச்சனையை சமாளித்தார். ரபாடா போன்ற பவுலர்களை சாதாரணமாக விளையாடினார். இவருக்காகவும் ஜெய்ஸ்வாலுக்கும் நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். இது நியாயமற்றது” என்று கூறி இருக்கிறார்.