கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன்ஸ் பற்றி ரவி சாஸ்திரி பேசியது மூளையற்ற வேலை” – கவுதம் கம்பீர் நேரடி தாக்கு!

இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்கும் 10 அணிகளும் அதற்கான தயாரிப்புகளில் மிகவும் மும்முரமாக இருக்கின்றன!

- Advertisement -

இந்திய அணியில் சில முக்கியமான வீரர்கள் காயத்தில் இருந்ததன் காரணமாக, ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அமைத்து வெளியிடுவதற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு தாமதமானது.

இந்த நிலையில் நேற்று உலகக் கோப்பைக்கு முன்பு நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் காயத்தில் இருந்து வலது கை பேட்ஸ்மேன்கள் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் திரும்ப வந்திருக்கிறார்கள்.

உலகக்கோப்பையில் களம் இறங்கும் இந்திய அணியை பொதுவாக எடுத்துக் கொண்டால், இப்போதைக்கு இடது கை பேட்ஸ்மேன் ஆக ஏழாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா மட்டுமே களம் இறங்க முடிவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன.

- Advertisement -

இதன் காரணமாக ரவி சாஸ்திரி ஜடேஜாவோடு சேர்த்து முதல் ஏழு இடங்களில் மூன்று இடது கை பேட்ஸ்மேன் கள் இருக்க வேண்டும் என்றும், இசான் கிஷானை ஆறு ஏழு மாதங்களாக தொடர்ந்து அணியில் வைத்திருக்கின்ற காரணத்தால், அவரை வைத்தே துவங்க வேண்டும், இன்னொரு இடது கை வீரராக திலக் வர்மா நல்ல தேர்வு என்றும் கூறியிருந்தார்.

தற்பொழுது ரவி சாஸ்திரி கருத்துக்கு கவுதம் கம்பீர் அதிரடியாக மறுப்பு தெரிவித்து பேசி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஒருவர் இடது கை ஆட்டக்காரரா? இல்லை வலது கை ஆட்டக்காரரா? என்பது முக்கியமே கிடையாது. மூன்று இடது கை ஆட்டக்காரர்கள் வேண்டும் என்று நடந்து கொண்டிருக்கும் விவாதங்கள் முற்றிலும் ஒரு பயனற்ற சிந்தனை. நீங்கள் விளையாடுபவர்களின் தரத்தைதான் பார்க்க வேண்டும். உங்களிடம் எத்தனை இடது கை ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள் என்று பார்க்கக் கூடாது. ஒரு நல்ல வீரர் இடது கை வலது கை எதுவாக இருந்தாலும் அவர் நன்றாக விளையாடுவார்.

எனவே ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் நன்றாக விளையாடினால் அவர்களை உலகக் கோப்பை இந்திய அணிக்கு தேர்ந்தெடுங்கள். ஒருவர் ஃபார்மில் இல்லையென்றால் அவர் இடது கை வீரராக இருந்தாலும் அவரை தேர்வு செய்யாதிர்கள். இந்த இடது கை ஆட்டக்காரர் குறித்தான விவாதங்களை துவங்க வேண்டிய அவசியமே கிடையாது என்று நான் நினைக்கிறேன்.

உங்களுக்கு இடது கை ஆட்டக்காரர்தான் வேண்டுமென்றால் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலே இருக்கிறார். நீங்கள் எப்பொழுதும் தரம் மற்றும் ஃபார்மை பார்க்க வேண்டும். அவர்கள் யார் என்பதை பார்க்கவே கூடாது!” என்று மிகக் கடுமையாக கூறியிருக்கிறார்!

உலகக் கோப்பை நெருங்க நெருங்க இந்திய அணி நிர்வாகத்தின் மீதான விமர்சனங்கள் வெளியில் இருந்து முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என்று மிக அதிக அளவில் வெளி வந்து கொண்டிருக்கிறது. இது உலகக்கோப்பை குறித்தான எதிர்பார்ப்பையே காட்டுகிறது!

Published by