அவர் இந்திய அணிக்கு அறிமுகமாகாத பொழுதே அவரது திறமை ரவிசாஸ்திரிக்கு தெரியும்; பிரபல இந்திய வீரர் பற்றி முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர்!

0
382
Sridhar

ஒரு கிரிக்கெட் அணிக்கு ஆல்ரவுண்டர் என்பவர் மிகப்பெரிய சொத்து மாதிரி. ஏனென்றால் ஒரு ஆல்ரவுண்டர் அணியில் இருக்கும் பொழுது, விளையாடும் அணியில் ஒரு கூடுதல் பேட்ஸ்மேனை கொண்டுவர முடியும், தேவைப்பட்டால் ஒரு கூடுதல் பந்து வீச்சாளரை கொண்டு வர முடியும். இவர்களால் அணி தேர்வு செய்யும் பொழுது எப்பொழுதும் அந்த வேலை எளிதாக இருக்கும். நாம் விளையாடும் ஆடுகளம் மற்றும் எதிரணிக்கு தகுந்தவாறு பிளேயிங் லெவனை அமைக்க வசதியாக இருக்கும்.

இந்த வகையில் ஆல்ரவுண்டர்கள் என்று எடுத்துக்கொண்டால் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிடைப்பது எளிது. ஏனென்றால் அவர்களுக்கு கொஞ்சம் வேலை குறைவு. அதே சமயத்தில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களுக்கு வேலை அதிகம். எனவே உலகெங்கும் கிரிக்கெட் நாடுகளில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களுக்கு எப்பொழுதும் பெரிய எதிர்பார்ப்பு, பெரிய இடம் அணியில் இருக்கும்.

இந்தியாவில் இப்படியான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்றால் அன்றும் இன்றும் என்றும் கபில்தேவ்தான். அவர் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பான பங்களிப்பை தந்திருக்கிறார். மேலும் ஒருநாள் போட்டி உலக கோப்பை இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையையும் வென்று கொடுத்திருக்கிறார். அந்த உலகக் கோப்பை தொடரில் அவரது பேட்டிங் அசாதாரணமானது.

இவருக்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் வந்தவர் என்றால் அவர் இர்பான் பதான். ஆனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை இருபத்தி ஒன்பது வயதிலேயே முடிந்துவிட்டது. இதற்கடுத்து தற்போது இருபத்தி எட்டு வயதாகி இருக்கும் ஹர்திக் பாண்டியாதான் இந்திய வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக அணியில் மிக முக்கியமான இடத்திலும் மதிப்பிலும் இருக்கிறார். இவருக்கு மாற்று வீரர் என்று தற்போது அணியில் யாருமே கிடையாது.

ஹர்திக் பாண்டியா குறித்து இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் சில முக்கியமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இவர் இன்றைய இந்திய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களோடு பணி செய்தவர்.

இதுபற்றி ஸ்ரீதர் கூறும்பொழுது “நாங்கள் ஹர்திக் பாண்டியாவை முழுமுதல் மேட்ச் வின்னர் ஆகத்தான் பார்த்தோம். ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக அறிமுகமாகாத பொழுதே அவரது திறமை பற்றி ரவி சாஸ்திரி மிக நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார். வெளிநாடுகளில் இந்திய அணி டெஸ்ட் போட்டியை வெல்ல ஹர்திக் பாண்டியா மிக உதவியான வீரராக இருப்பார் என்பது அவரது எண்ணம். மணிக்கு 140 கிலோ மீட்டருக்கு மேல் பந்து வீச கூடிய வேகப்பந்துவீச்சாளர் அவர். எனவே ஹர்திக் பாண்டியாவால் அணிக்கு என்னென்ன நன்மைகளை கொண்டு வர முடியும் என்று எங்களுக்கு தெரியும். அவர் அணிக்குள் வந்ததும் மகி, விராட், ரோகித் ஆகியோரிடம் பாடங்கள் கற்க ஆரம்பித்தார். அவர் அணியில் இருந்தால் என்னென்ன நன்மைகள் இருக்கும் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “கிரிக்கெட் விளையாட்டில் ஹர்திக் பாண்டியாவின் பலம் எதுவென்றால், அவர் இந்த விளையாட்டை நேசித்து விரும்பி விளையாடுவதுதான். அவர் பேட்டிங் பவுலிங் பீல்டிங் என எது ஒன்றையும் களத்தில் அனுபவித்து செய்யக்கூடியவர். அவரிடம் பலவீனம் என்று எதையுமே பார்க்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.