18ஆவது ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரின் பதினெட்டாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
சண்டிகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ராஜஸ்தான் அணிக்கு மீண்டும் கேப்டனாக சஞ்சு சாம்சன் பொறுப்பேற்றார். இந்த சூழ்நிலையில் பேட்டிங்கை தொடங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் சாம்சன் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடி 10.2 ஓவர்களில் 89 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய சாம்சன் 26 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார்.
தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 45 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். இதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்சர்கள் அடங்கும். மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் ரியான் பராக் 25 பந்துகளை எதிர் கொண்டு 43 ரன்கள் குவிக்க, அதற்குப் பின்னர் களமிறங்கிய வீரர்கள் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு அதிரடியாக விளையாடினார்கள். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களம் இறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் பிரின்ஸ் ஆர்யாவை ஆர்ச்சர் தனது முதல் பந்திலேயே வீழ்த்தினார். மற்றொரு தொடக்க வீரர் சிம்ரன் சிங் 17 ரன், ஸ்ரேயாஸ் அய்யர் 10 ரன்னில் வெளியேறினார்கள். மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஸ்டாய்னிஷ் ஒரு ரன்னில் எதிர்பாராத விதமாக வெளியேற, நெகல் வதேரா மற்றும் மேக்ஸ்வெல் ஜோடி ஓரளவு பஞ்சாப் அணியை மீட்டது.
இதையும் படிங்க:அவர் மட்டும் இருந்தா கதையே வேற.. 9 முறை 180+ ரன்களை சேஸிங் செய்து கொடுத்த ஜாம்பவான் வீரர்.. மிஸ் செய்யும் ரசிகர்கள்
இந்த ஜோடி 52 பந்துகளில் 88 ரன்கள் குவித்தது. இதில் மேக்ஸ்வெல் 21 பந்தில் 30 ரன் எடுத்து வெளியேற, அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த வதேரா 41 பந்துகளை எதிர் கொண்டு 62 ரன்கள் குவித்து எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னால் வந்த வீரர்கள் வரிசையாக ஆட்டமிழக்க இறுதியில் பஞ்சாப் அணி 20 அவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே குவித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பவுலிங்கில் கலக்கிய 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஆர்ச்சர் 3 விக்கட்டுகள் கைப்பற்றி அசத்தினார். பஞ்சாப் அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்திருக்கும் நிலையில் ராஜஸ்தான் அணிக்கு இது இரண்டாவது வெற்றியாக அமைந்துள்ளது.